கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
கொடைக்கானலுக்கு வாரவிடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம். அதன்படி வாரவிடுமுறையையொட்டி நேற்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் படையெடுத்தனர். இதனால் மோயர்பாயிண்ட், பைன் மரக்காடுகள், பில்லர்ராக், குணா குகை, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் வெள்ளிநீர் வீழ்ச்சி ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்கு சுற்றுலா பயணிகள் 'செல்பி' மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
கொடைக்கானலில், நேற்று காலை முதலே குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. இதை அனுபவித்தபடி நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தனர். மேலும் ஏரியை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.