கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்;

Update: 2022-08-28 16:49 GMT

சுற்றுலா பயணிகள் கூட்டம்


'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் சீசன் முடிவடைந்த நிலையிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக அரசு விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. அதன்படி வார விடுமுறையையொட்டி நேற்று அதிகாலை முதலே தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர்.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்தது. நேற்று பகல் நேரத்தில் இதமான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனை சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர்.


தரை இறங்கிய மேககூட்டம்

சுற்றுலா இடங்களான மோயர் பாயிண்ட், பைன்மரக்காடு, பில்லர் ராக், குணா குகை ஆகிய பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. ேமாயர் பாயிண்ட் பகுதியில் தரை இறங்கிய மேகக்கூட்டத்தை பார்த்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். மேலும் ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் பூத்து குலுங்கும் வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இன்னும் சிலர் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தும், ஏரியை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி மேற்கொண்டனர். இதேபோல் மன்னவனூர் பகுதியில் உள்ள சூழல் சுற்றுலா மையத்திலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்