திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
விடுமுறை நாளான நேற்று திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.;
திருவட்டார்:
விடுமுறை நாளான நேற்று திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
குமரி மாவட்டத்தில் தற்போது மழை குறைந்துள்ளதால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் கோதையாற்றின் குறுக்கே அமைந்துள்ள திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீர் கொட்டி வருகிறது.
இந்தநிலையில் விடுமுைற நாளான நேற்று திற்பரப்பில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் குளிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்து நின்று உற்சாகத்துடன் குளித்தனர்.
பின்னர், அருவியின் அருகில் அமைந்துள்ள நீச்சல் குளத்திலும் நீச்சலடித்து குளித்து மகிழ்ந்தனர். மேலும், அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா, அலங்கார நீரூற்று ஆகியவற்றையும் பார்த்து ரசித்தனர். பின்னர், அவர்கள் அருவியின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையில் படகு சவாரி செய்து கோதையாற்றின் அழகை கண்டு ரசித்தனர்.
போக்குவரத்து நெருக்கடி
திற்பரப்புக்கு நேற்று வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இதனால், திற்பரப்பில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இதன்காரணமாக சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் வெகுதூரத்துக்கு சாலையோரம் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்ததை காணமுடிந்தது.
எனவே, திற்பரப்பு பஞ்சாயத்து நிர்வாகமும், காவல் துறையும் இணைந்து போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வுகாண முன்வரவேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.