சூரியன் மறைவு, சந்திரன் உதயத்தை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கன்னியாகுமரியில் சித்ரா பவுர்ணமி நாளான நேற்று மேகமூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும் காட்சிைய பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2023-05-05 21:02 GMT

தென்தாமரைகுளம்,

கன்னியாகுமரியில் சித்ரா பவுர்ணமி நாளான நேற்று மேகமூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும் காட்சிைய பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

அபூர்வ காட்சி

சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் காலையில் சூரிய உதயமாகும் காட்சியும், மாலையில் மறையும் காட்சியும் தெரியும். இதை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். சித்ரா பவுர்ணமி அன்று அரபிக் கடலில் சூரியன் மறையும் அதே நேரத்தில் வங்காள விரிகுடாவில் இருந்து சந்திரன் தனது ஒளியை வீசத் தொடங்கும். இந்த அபூர்வ காட்சியை கன்னியாகுமரியில் ஒரே இடத்தில் அமர்ந்து பார்க்கலாம்.

இந்த ஆண்டு சித்திரா பவுர்ணமி நேற்று வந்தது. இதையொட்டி நேற்று மாலை 6 மணிக்கு சூரியன் மறைவு மற்றும் சந்திரன் உதயம் காட்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் திரண்டிருந்தனர்.

ஏமாற்றம்

ஆனால் மேகமூட்டம் காரணமாக சூரியன் மறையும் காட்சி தெளிவாகத் தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் சந்திரன் உதயமாகும் காட்சி ஆரம்பத்தில் தெளிவாகத் தெரியவில்லை. இரவு 7 மணிக்கு பின்னர் ஓரளவிற்கு தெரிந்தது. இதை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.

பகவதி அம்மன் கோவில்

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு தீபாராதனை, 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், நெய் பன்னீர், இளநீர், தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புஷ்பாபிஷேகம்

மாலையில் சாயராட்சை தீபாராதனை, அம்மனுக்கு பல வகையான மலர்களால் புஷ்பாபிஷேகம், இரவு 8 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வர செய்யும் நிகழ்ச்சி, பின்னர் அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் அமரச்செய்து தாலாட்டு நிகழ்ச்சி போன்றவை நடந்தது.

இதற்கான ஏற்பாடுகளை நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்