சுற்றுலா பயணிகளை காட்டு யானை விரட்டியதால் பரபரப்பு
குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை காட்டு யானை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் சாலையை கடந்த யானையை புகைப்படம் எடுத்த போது இந்த சம்பவம் நடந்தது.
குன்னூர்
குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை காட்டு யானை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் சாலையை கடந்த யானையை புகைப்படம் எடுத்த போது இந்த சம்பவம் நடந்தது.
காட்டு யானை
நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையை ஒட்டி தேயிலை, காபி தோட்டங்கள் உள்ளது. அந்த தோட்டங்கள் மற்றும் வனப்பகுதிகளில் பலா மரங்கள் உள்ளன. தற்போது மலைப்பாதையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள பலா மரங்களில் பழங்கள் காய்த்து இருக்கின்றன. இந்த பலாப்பழங்களை ருசிப்பதற்காக சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் முகாமிட்டு வருகின்றன.
மேலும் யானைகள் தண்ணீர், உணவு தேடி அவ்வப்போது சாலையை கடந்து செல்கிறது. இதனை வனத்துறையினர் கண்காணித்து வாகனங்களை சிறிது நேரம் நிறுத்தி, யானைகள் பாதுகாப்பாக சாலையை கடக்க வழிவகை செய்து வருகின்றனர். இருப்பினும், சாலையில் யானையை பார்த்ததும், சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்க அருகில் செல்கின்றனர். இதனால் யானைகள் அவர்களை விரட்டும் சம்பவம் நடந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை கே.என்.ஆர்.நகர் அருகே காட்டு யானை சாலையை கடந்து சென்றது.
சுற்றுலா பயணிகளை விரட்டியது
அப்போது அந்த வழியாக காரில் சென்ற சுற்றுலா பயணிகள், காரை சாலையோரம் நிறுத்தி விட்டு கீழே இறங்கினர். பின்னர் அவர்கள் யானையை செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்றனர். இதனால் ஆக்ரோஷம் அடைந்த காட்டு யானை திடீரென திரும்பி வந்து, சுற்றுலா பயணிகளை விரட்டியது. இதனால் அச்சம் அடைந்த அவர்கள் அலறியடித்த படி காருக்குள் ஏறி உயிர் தப்பினர். அதன் பின்னர் யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் தொந்தரவு செய்து புகைப்படம் எடுக்க முயற்சிப்பது குற்றமாகும். தற்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே, யானைகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் புகைப்படம் எடுக்கக்கூடாது என்றனர்.
தாக்கும் அபாயம்
இதேபோல் முதுமலை புலிகள் காப்பகம் கார்குடி பகுதியில் சாலையோரம் சுள்ளி கொம்பன் என்ற காட்டு யானை முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகிறது. இதை கர்நாடகம் உள்பட வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் செல்போன்களில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
அந்த சமயங்களில் சுள்ளி கொம்பன் யானை வாகனங்களை துரத்தி வருகிறது. இதனால் எதிர்பாராத விதமாக யானை வாகனங்களை தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, முதுமலை சாலையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.