பாலருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
ஆரியங்காவு பாலருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
செங்கோட்டை:
தமிழக-கேரள எல்லையில் கேரளா மாநிலம் ஆரியங்காவில் அமைந்துள்ளது பாலருவி. இந்த அருவியில் குளிப்பதற்காக இருமாநில சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வந்து செல்வர். கோடை காலத்தில் பாலருவியில் தண்ணீர் வரத்து குறைந்தது. மேலும் வனப்பகுதியில் இருக்கும் யானை, சிறுத்தை போன்ற விலங்குகள் பாலருவியில் தண்ணீர் குடிப்பதற்கு வரும் என்பதால், அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. அருவிக்கு செல்லும் நுழைவு பகுதியை பூட்டி விட்டனர்.
தற்போது கேரளாவில் தொடர்மழை பெய்து வருவதால் பாலருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்து உள்ளனர். இதற்காக பாலருவிக்கு செல்லும் நுழைவுபாதை நேற்று திறக்கப்பட்டது. ஏராளமான சுற்றுலா பயணிகள் பாலருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். அருவியில் குளிக்க செல்பவர்களுக்கு நுழைவு பகுதியில் இருந்து வனத்துறை சார்பில் தனி பஸ் விடப்பட்டு உள்ளது. சுற்றுலா பய.ணிகள் பாலருவிக்கு பஸ்சில் சென்று குளித்து விட்டு, மீண்டும் பஸ்சில் திரும்பிவர கட்டணமாக ரூ.70 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மற்ற வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை.