குருசடை தீவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
3 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து படகு மூலம் சென்று குருசடைதீவு பகுதியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.;
ராமேசுவரம்,
3 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து படகு மூலம் சென்று குருசடைதீவு பகுதியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
குருசடை தீவு
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே உள்ள சிங்கலி தீவில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் வரையிலான இடைப்பட்ட மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மொத்தம் 21 தீவுகள் உள்ளன. இந்த தீவுகளை சுற்றியுள்ள கடல் பகுதியில் ஏராளமான பவளப்பாறைகள், டால்பின், கடல் பசு உள்ளிட்ட 3600 வகையான அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. மேலும் தீவு பகுதிகளை சுற்றி உள்ள பவளப்பாறைகள், மீன்கள் இனப்பெருக்கத்திற்கு உகுந்த பகுதியாக விளங்கி வருகின்றது.
இதனிடையே பாம்பன் குந்துகால் பகுதியில் இருந்து வனத்துறை மூலம் சூழல் சார்ந்த சுற்றுலா சட்டத்தின் கீழ் சுற்றுலா படகு போக்குவரத்து கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. பாம்பன் குந்துகால் பகுதியில் இருந்து குருசடை தீவு வரையிலும் நடைபெறும் படகு போக்குவரத்து சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
குவிந்த சுற்றுலா பயணிகள்
இந்த நிலையில் கடந்த 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பாம்பன் குந்துகால் பகுதியில் இருந்து குருசடை தீவுக்கு படகு போக்குவரத்து செய்ய சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது. குந்து கால் கடற்கரை பகுதியில் படகில் அழைத்து செல்லப்படும் சுற்றுலா பயணிகள் முதலாவதாக தீவு அருகே உள்ள கோரி வரையிலான கடல் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு தீவை ஒட்டிய கடல் பகுதியில் உள்ள பவளப்பாறைகளை படகில் இருந்தபடியே பார்த்து ரசித்தனர்.
பின்னர் அங்கிருந்து படகு மூலம் குருசடை தீவுக்கு அழைத்து செல்லப்பட்டு சுற்றுலாப்பயணிகள் தீவில் இறக்கி விடப்பட்டனர். குருசடை தீவு பகுதியில் வைக்கப்பட்டுள்ள இறந்து போன திமிங்கலங்களின் தாடை, எலும்பு உள்ளிட்டவைகளை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மேலும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள கடலில் மிதக்கும் பல வகையான பவளப்பாறை மற்றும் சுண்ணாம்பு கற்களையும் பார்த்து ரசித்தனர்.
கட்டணம்
கடலில் மிதக்கும் பல வகையான கற்களையும், அதன் சிறப்பு குறித்தும் வனத்துறையினர் விளக்கி கூறினர். தொடர்ந்து தீவை சுற்றியுள்ள பலவகை மரங்கள், செடிகளின் சிறப்பு குறித்தும் வனத்துறையினர் கூறினர். அதுபோல் குருசடை தீவின் கடற்கரை பகுதியில் நின்றபடி அருகே கடலின் நடுவே உள்ள சிங்கலி தீவு மற்றும் கடலோடு சேர்ந்த குரு சடை தீவின் அழகையும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மேலும், இறந்து போன பல அரியவகை மீன்களும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வனச்சரகர் மகேந்திரன் கூறியதாவது:- குந்துகால் குருசடை தீவுக்கு சுற்றுலா படகு போக்குவரத்து தொடங்கி ஓராண்டு முடிந்துள்ளது. இதுவரையிலும் 8 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் தீவை பார்க்க வந்துள்ளனர். கடந்த 4 மாதமாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. படகில் சென்று வர பெரியவர் ஒரு நபருக்கு ரூ.300, மாணவர்களுக்கு ரூ.250 கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது என்றார்.