தடையை மீறி செல்லும் சுற்றுலா வாகனங்கள்
கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்கள் தடையை மீறி செல்கின்றன. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி,
கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்கள் தடையை மீறி செல்கின்றன. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்லட்டி மலைப்பாதை
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தலைகுந்தாவில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடிக்கு சாலை செல்கிறது. இந்த மலைப்பாதையில் அபாயகரமான 36 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதனால் வாகனங்களை முதல் மற்றும் 2-வது கியரில் மட்டும் இயக்க வேண்டும். இதை மீறி வாகனங்கள் இயக்கப்பட்டதால் அடிக்கடி விபத்துகள் நடந்து வந்தது. இதை தடுக்க வெளிமாநில, பிறமாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் கல்லட்டி மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
உள்ளூர் வாகனங்கள் மற்றும் அவசர தேவைக்காக செல்லும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இரவு நேரத்தில் அனுமதி இல்லை. தற்போது கோடை சீசன் தொடங்கி உள்ளதால், ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். ஊட்டியில் இருந்து கல்லட்டி வழியாக கடந்த சில நாட்களாக வெளிமாநில, பிற மாவட்ட பதிவு எண்கள் கொண்ட வாகனங்கள் தடையை மீறி செல்கிறது. இதனால் கல்லட்டி சோதனைச்சாவடியில் இருந்து வாகனங்கள் ஊட்டிக்கு திருப்பி விடப்பட்டு உள்ளது.
உரிய நடவடிக்கை
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
கல்லட்டி மலைப்பாதை கொண்டை ஊசி வளைவுகள், செங்குத்தான சாலைகளை கொண்டது. அங்கு வாகனங்களை இயக்குவது சவாலானது. உள்ளூர் மக்களே அந்த சாலையில் சென்று விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். 2018-ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் 5 பேர் இறந்தனர். தலைகுந்தா சோதனைச்சாவடியில் போலீசார் இருந்தும், அதை தாண்டி கல்லட்டி வன சோதனைச்சாவடிக்கு வாகனங்கள் வருவது அதிர்ச்சி அளிக்கிறது.
பல்வேறு காரணங்களுக்காக சில வெளி மாநில, பிற மாவட்ட வாகனங்களை போலீசார் அனுமதிக்கின்றனர். கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்கள் சென்று வந்தால், விபத்து ஏற்பட்டு அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அத்திக்கல் உள்ளிட்ட சில பகுதிகள் வழியாக சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே, விபத்து ஏற்படுவதை தடுக்க கல்லட்டி மலைப்பாதையில் வெளியூர் வாகனங்கள் செல்வதை முழுமையாக தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.