'தொடுடா பார்க்கலாம்', 'சனாதனம் எங்கள் உயிர்மூச்சு': தி.மு.க.-பா.ஜ.க. இடையே போஸ்டர் யுத்தம்; கோவையில் பரபரப்பு
அமைச்சர் உதயநிதியின் சனாதன பேச்சு எதிரொலியாக கோவையில் தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையேயான போஸ்டர் யுத்தம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.;
கோவை,
சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க கூட்டத்தில் சில நாட்களுக்கு முன் பேசிய தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது தான். சனாதனம் சமத்துவத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது. வீட்டு படிக்கட்டை தாண்ட கூடாது என சனாதனம் பெண்களை அடிமைப்படுத்தியது.
கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா காய்ச்சல் போன்றவற்றை எதிர்க்க முடியாது. ஒழிக்கத்தான் வேண்டும். அதுபோல ஒழிக்கப்பட வேண்டியதே சனாதனம் என்று பேசியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பா.ஜ.க. சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து, உதயநிதியின் இந்த விமர்சனத்திற்கு இந்தியா கூட்டணி அமைதி காப்பது ஏன்? என்ற கேள்விக்கு காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் பதில் அளித்து பேசினார்.
அவர் பேசும்போது, ஒவ்வொரு கட்சிக்கும் கருத்து சொல்ல சுதந்திரம் உண்டு. அனைவருடைய நம்பிக்கையையும் மதிக்கிறோம் என்று பொதுவாக கூறினார். சமதர்ம சமுதாயம் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்றும் அவர் பேசினார்.
இதேபோன்று, இந்தியா கூட்டணியை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் கூறும்போது, பிற மதங்களை நாம் மதிக்க வேண்டும். இந்த கருத்துகளுக்கும் இந்தியா கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறினார்.
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறும்போது, ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களை புண்படுத்த கூடிய எந்தவொரு விசயத்துடனும் நாம் தொடர்புப்படுத்தி கொள்ள கூடாது என கூறினார்.
இந்த நிலையில் அயோத்தியை சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியார் என்ற சாமியார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்ததோடு அவரது தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் அளிக்கப்படும் என மிரட்டல் விடுத்து பேசிய வீடியோ சர்ச்சையானது.
சாமியாரின் இந்த மிரட்டலுக்கு தி.மு.க.வினரும், கூட்டணி கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொலைவெறியை தூண்டும் விதமாக மிரட்டல் விடுத்துள்ள சாமியார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் அந்தந்த மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் சாமியார் பரமஹம்ச ஆச்சாரியாவுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சர் உதயநிதியின் சனாதன பேச்சு விவகாரத்தில் கோவையில் தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினர் இடையே போஸ்டர் யுத்தம் ஏற்பட்டு உள்ளது. கோவையின் பல்வேறு இடங்களில் ஒரு தரப்பினரை தாக்கும் வகையில், மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள் போஸ்டர்களை ஒட்டியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதன்படி, தி.மு.க. சார்பில் ஒட்டப்பட்டு உள்ள போஸ்டரில், போலிச்சாமியாரே! 100 கோடி தர்ரோம் தொடுடா பார்க்கலாம் என்ற வாசகங்கள் காணப்படுகின்றன.
இதேபோன்று பா.ஜ.க. சார்பில் ஒட்டப்பட்டு உள்ள போஸ்டரில், சனாதனம் எங்கள் உயிர்மூச்சு என்ற வாசகங்கள் காணப்படுகின்றன.
கோவை மாநகரில் டவுன்ஹால், லங்கா கார்னர், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சனாதன பேச்சு சர்ச்சையில் இருந்து, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே) மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் விலகி கொண்டன.
இதனால், இந்தியா கூட்டணியில் எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமையற்ற நிலை காணப்படுகிறது. ஒற்றுமையை பாதுகாக்க ராஜதந்திர பணிகளில் தலைவர்கள் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.