திருச்சியில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை

திருச்சியில் விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்தது.;

Update: 2022-09-26 22:42 GMT

கொட்டித்தீர்த்த மழை

திருச்சியில் கடந்த ஒரு வாரமாக பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பகலில் வெயில் கொளுத்திய நிலையில் மாலையில் திடீரென கருமேக கூட்டங்கள் வானில் திரண்டு ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. பின்னர் நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் தொடங்கிய மழை விடிய விடிய பெய்ததோடு காலை 7 மணி வரை நீடித்தது.

நள்ளிரவில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டதுபோல் இடி, மின்னலுடன் 5 மணி நேரத்துக்கும் மேல் கொட்டித்தீர்த்த இந்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளம் போல் ஓடியது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக திருச்சி டவுனில் 16.90 சென்டிமீட்டரும், திருச்சி ஜங்ஷன் மற்றும் பொன்மலையில் 11.40 சென்டிமீட்டரும், துவாக்குடியில் 10 சென்டிமீட்டரும் மழை அளவு பதிவானது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 130.7 சென்டிமீட்டர் மழை பதிவானது.

சென்னை வானிலை ஆய்வு மைய கணக்கெடுப்பின்படி, திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 7.68 செ.மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் 11.4 செ.மீட்டர் மழை பெய்தது. இந்தநிலையில் கடந்த ஒரு மாதம் பெய்த மழை அளவை விட நேற்று முன்தினம் ஒரே நாள் இரவில் சுமார் 11 மடங்கு அதாவது 130.7 செ.மீட்டர் மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.

தாக்குப்பிடிக்காத சாலைகள்

திருச்சி மாநகரில் பல இடங்களில் போதிய மழைநீர் வடிகால் இல்லாததாலும், பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதாலும் நேற்று முன்தினம் ஒரு நாள் பெய்த மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாத அளவிற்கு சாலைகள் மோசமான நிலைக்கு மாறின. திருச்சி நகரில் கருமண்டபம், கே.கே.நகர், தில்லைநகர், உறையூர், பொன்மலை, வெங்கடேஷ்வராநகர், இந்திராநகர், விமான நிலைய பகுதிகள் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்ட 3-ம் கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இந்த பணிகளுக்காக நன்றாக இருந்த சாலைகள் எல்லாம் பள்ளம் தோண்டப்பட்டு சேதமாகி உள்ளன. கருமண்டபம், ஜே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே சரியான சாலை வசதிகள் கிடையாது. அந்த இடங்களில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழிகளும் இன்னும் சரியாக மூடப்படாமல் உள்ளன. சில இடங்களில் பாதாள சாக்கடை குழிகள் மூடப்பட்டாலும் வீடுகளுக்கு குழாய் இணைப்பு கொடுப்பதற்காக பணிகளை அப்படியே விட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள். மழையால் இந்த சாலைகள் எல்லாம் வெள்ளக்காடாக மாறின.

சேற்றில் சிக்கிய கார்கள்

இதன் காரணமாக இந்த தெருக்களில் குடியிருக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த காரை வெளியே எடுத்து வர முடியாமல் அவதிப்பட்டனர். பல இடங்களில் கார்கள் சாலை பள்ளத்தில் சேற்றில் சிக்கிக் கொண்டன. தெருக்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் வெளியில் இருந்தும் கார்கள் இந்த தெருக்களுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

திருச்சி கருமண்டபம் சக்தி நகர் 10-வது கிராசில் தெரு முழுவதும் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாததால் குண்டும் குழியுமாகக் கிடந்தன. அதில் தண்ணீர் தேங்கியதால் கார்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அவசரத் தேவைக்காக வந்த கார்கள் பள்ளத்தில் சிக்கிக் கொண்டதால், அவற்றை பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் மீட்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கிராப்பட்டி அன்புநகர் ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் புத்தூர் 6 கண்பாலத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்

இதேபோல் திருச்சி ஜே.கே. நகர், ராஜகணபதி நகர், திருமுருகன் நகர், கொட்டப்பட்டு எம்.ஜி.ஆர்.நகர், இந்திராநகர், வெங்கடேஷ்வராநகர், ரன்வேநகர், ஐஸ்வர்யா எஸ்டேட் பகுதிகளில் சரியான மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் காலிமனைகளில் தேங்கியது. ஜே.கே.நகர் பாலாறு தெருவில் தேங்கிய தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

தில்லைநகரில் முதலாவது கிராசில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் தண்ணீர் புகுந்தது. மேலும், தனியார் எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமின் குடோனுக்குள் தண்ணீர் புகுந்ததால், விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டு இருந்த ஏராளமான மின்சாதன பொருட்கள் நீரில் நனைந்து சேதமடைந்தன. திருச்சி-மதுரை சாலையில் உள்ள நத்தர்ஷா பள்ளிவாசலில் வெள்ளநீர் புகுந்தது. காஜாமலை பகுதியில் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மரம் சாய்ந்து விழுந்தது.

தண்ணீர் சூழ்ந்த அலுவலகங்கள்

இது ஒருபுறம் இருக்க, கொட்டப்பட்டு கோழிப்பண்ணை சாலையில் உள்ள கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குனர் அலுவலகம், தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் மின்கட்டணம் செலுத்தும் பகுதி, திருச்சி கலெக்டர் அலுவலக வளாகம், ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய வளாகம், திருச்சி மாவட்ட கோர்ட்டு வளாகம், திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்துக்குள் என்று பல அரசு அலுவலக வளாகங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கி நின்றதால் பொதுமக்களும், அரசு ஊழியர்களும் கடும் அவதி அடைந்தனர்.

இதுபற்றி அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் பல இடங்களில் தேங்கி நின்ற மழைநீரை பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் தற்காலிக வடிகால் வசதி ஏற்படுத்தியும், கழிவுநீர் உறிஞ்சும் வாகனம் மூலமும் அப்புறப்படுத்தினர். தில்லைநகர் பகுதியில் டீசல் மோட்டார் கொண்டு தண்ணீர் இரைத்துவிடப்பட்டது. நகரின் பல பகுதிகளிலும் இது போன்ற அவலநிலை ஏற்பட்டது.

பொதுமக்கள் குமுறல்

இதுபற்றி பொதுமக்கள் தரப்பில் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

ஆட்டோ டிரைவர் செல்வம் (தில்லைநகர்):- திருச்சியில் ஒரு நாள் பெய்த மழைக்கே சாலைகள் அனைத்தும் சேதமடைந்து, தாக்குப்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனது ஆட்டோவில் சவாரி செய்யும் பல பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகம் மீது கடும் அதிருப்தியில் உள்ளதை, அவர்கள் புலம்புவதை வைத்து பார்க்க முடிகிறது. பாதாள சாக்கடை அவசியமான ஒன்றுதான். ஆனால் அதற்கான பணிகளை வருடக்கணக்கில் இழுத்தடிக்காமல் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பாதாள சாக்கடை பணிகள் நிறைவுற்ற இடங்களில் உடனடியாக தார் சாலை போடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மழைநீர் வடிகால்கள் இருக்கும் இடங்களில் அவற்றை நன்கு ஆழமாக தூர்வார வேண்டும். மழைநீர் வடிகால் இல்லாத பகுதிகளில் புதிதாக வடிகால் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்காலிக நடவடிக்கை

சமூக ஆர்வலர் அப்பாத்துரை:- பாதாள சாக்கடை திட்ட மூன்றாவது கட்ட பணிகளை பொறுத்தவரை புறநகர் பகுதிகளில்தான் அதிக அளவில் பணிகள் நடந்து வருகின்றன. அங்கு ஏற்கனவே தார் சாலைகள் கிடையாது. மண் பாதைகள்தான் உள்ளன. தற்போது பெய்த மழையால் அந்த மண் பாதைகள் எல்லாம் சேறும், சகதியுமாக மாறிவிட்டன. இதனால் மக்கள் நடந்து செல்ல முடியாமலும், இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த அவதியை போக்க மாநகராட்சி நிர்வாகம் தற்காலிக நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பகுதிகளில் கருங்கல் ஜல்லி மற்றும் பாறை மணல் அடித்து செம்மைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


சோமரசம்பேட்டை அருகே வயலூரில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக சுமார் 60 ஏக்கருக்கும் மேற்பட்ட வாழைக்கன்றுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், நாங்கள் வாழைக்கன்றுகள் ஊன்றி 4 மாதங்கள் ஆகின்றன. மழையால் தண்ணீர் சூழ்ந்து வாழைக்கன்றுகள் மூழ்கியதால் இனி வாழைத்தார் போட்டாலும் பழைய மகசூல் கிடைக்காது. இந்த மழை நீரினால் பயிரின் வேர் அழுகி நுண்ணூட்ட சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வாழைக்கன்றுகளை ஆய்வு செய்து எங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க செய்யவேண்டும், என்றனர். இதேபோல் குழுமணி அருகே உள்ள ஏகிரிமங்கலம் கிராமத்திலும் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை மரங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்