சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை: கரும்பு, மக்காச்சோள பயிர்கள் சேதம் விவசாயிகள் கவலை
சங்கராபுரம், கச்சிராயப்பாளையம் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் கரும்பு, மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.;
மூங்கில்துறைப்பட்டு,
சங்கராபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்று மற்றும் இடி மின்னலுடன் தொடங்கிய பலத்த மழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் சூறாவளிக்காற்றால், சங்கராபுரம் அடுத்த மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள சீர்பாதநல்லூர், ஆற்கவாடி, அரும்பராம்பட்டு, சுத்தமலை, சின்னக்கொல்லியூர், பெரிய கொல்லியூர் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கரும்பு பயிர்கள் சாய்ந்தன. இதேபோல் கச்சிராயப்பாளையம் பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக கல்வராயன்மலையில் உள்ள புதுப்பாலப்பட்டு, கொசப்பாடி, பாச்சேரி, மோட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 100 ஏக்கருக்கு மேலான மக்காச்சோள பயிர்களும் சாய்ந்து நாசமானது.
சங்கராபுரம்
சங்கராபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் செம்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்த நாராயணன் மனைவி மோனிஷா என்பவருடைய வீட்டின் சிமெண்டு கூரை திடீரென பறந்து கீழே விழுந்தது. இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று தங்கினர். இதுபற்றி அறிந்த வருவாய்த்துறையினர், நேற்று காலை அங்கு வந்து சேதமடைந்த வீட்டை பார்வையிட்டனர்.