தக்காளி செடிகளை நிலத்திலேயே அழிக்கும் விவசாயிகள்

உரிய விலை கிடைக்காததால் தக்காளி செடிகளை விவசாயிகள் டிராக்டர் ஏற்றி அழித்து வருகின்றனர்.;

Update: 2023-04-07 17:42 GMT

உரிய விலை கிடைக்காததால் தக்காளி செடிகளை விவசாயிகள் டிராக்டர் ஏற்றி அழித்து வருகின்றனர்.

தக்காளி சாகுபடி

'உழவர் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்' என்று சொல்வார்கள். ஆனால் இன்றைக்கு விவசாயிகளின் நிலைமை பரிதாபத்திற்குரியதாக உள்ளது. ஒரு நிலத்தை விற்று மற்றொரு பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிருக்கு உரம், பூச்சி மருந்து வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதன் பின்னர் விலையில்லாமல் வெறுப்படைந்து சாகுபடியை கைவிட்டு மாற்றுவேலைக்கு சென்று விடுகிறார்கள்.

அது மட்டுமல்ல, ஒவ்வொரு முறையும் விவசாயி நஷ்டம் அடையும்போது நிலத்தை விற்றுவிட்டு ேவறு ஊருக்கு இடம் பெயரும் நிைலமை ஏற்பட்டு உள்ளது. தக்காளி, கத்தரி, கொத்தமல்லி உள்ளிட்ட பிற காய்கறிகளின் விலை குறைவாகவும், சில நாட்கள் கூடுதல் விலைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் அதற்கு போதிய விலை இல்லை. இதனால் தக்காளி பழத்தை பறிக்கும் ஆட்களுக்கு கூட சம்பளம் கிடைப்பதில்லை. எனவே சாகுபடி செய்த தக்காளியை அழிக்கும் நிலைமைக்கு விவசாயிகள்தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து கரைப்புதூர் ஊராட்சி குப்பிச்சிபாளையத்தில் உள்ள பாண்டுவழி தோட்டத்தை சேர்ந்த விவசாயி சேகர் கூறியதாவது:-

நிலத்திலேயே அழிக்கும் முயற்சி

3 ஏக்கரில் தக்காளி பயிரிட்டு இருந்தேன். இந்த 3 ஏக்கருக்கு உழுவதற்கு ரூ.13 ஆயிரமும், நாற்றுக்கு ரூ.26 ஆயிரமும், நாற்று நடுவதற்கு ரூ.22 ஆயிரமும், மருந்து உரத்திற்கு ரூ.40 ஆயிரமும் செலவாகிறது. தக்காளி பறிப்பதற்கு கிலோவுக்கு 3 ரூபாயும் செலவு ஆகிறது. ஆனால் தற்போது ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி 22 விற்றால் மட்டுமே ஓரளவு லாபம் பெற முடியும். உரிய விலை கிடைக்காததால் தக்காளி செடிகளை நிலத்திலேயே அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

இதனால் 3 ஏக்கருக்கு 1½ லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மத்திய-மாநில அரசுகள் விவசாய பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பல்லடம் பகுதியில் அதிக அளவில் தக்காளி உற்பத்தி செய்யப்படுவதால் குளிர்பதன கிடங்கு உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்