காங்கயம் வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.40-க்கு விற்பனை

காங்கயம் வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை மேலும் உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2022-09-26 17:48 GMT

காங்கயம் வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை மேலும் உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காங்கயம் வாரச்சந்தை

காங்கயம் பஸ் நிலையம் அருகே வாரச்சந்தை வளாகம் உள்ளது. வாரம் தோறும் திங்கட்கிழமை கூடும் இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள், கீரைகள், வீட்டு உபயோக பொருட்கள் முதற்கொண்டு அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று 500-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெறும்.

வார சந்தைக்கு காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான நகர, கிராம மக்கள் இங்கு வந்து ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள், மளிகை சாமான்கள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள்.

தக்காளி கிலோ ரூ.40-க்கு விற்பனை

இதன் காரணமாகவே வாரந்தோறும் திங்கட்கிழமை இந்த சந்தை நாளில் இந்த பகுதியில் உள்ள விவசாய தொழிலாளர்கள், தேங்காய் களம், அரிசி ஆலை, தேங்காய் எண்ணெய் ஆலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு வார சம்பளத்துடன் விடுமுறை விடப்படுகிறது. இதனால் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் நகர பகுதி மக்கள் இந்த சந்தைக்கு வந்து செல்வார்கள்.

நேற்று கூடிய வார சந்தையில் முதல் தரமான தக்காளி ஒரு கிலோ ரூ.40-க்கும், நாட்டு ரக தக்காளி ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் கடந்த வாரத்திலும் தக்காளி இதே விலையில் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் தமிழகத்தில் வரும் நாட்களில் மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதால் தக்காளியின் விலை மேலும் உயரும் என விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்