சேலத்தில் நாளை உணவு திருவிழா உலக சாதனைகள் நிகழ்த்த ஏற்பாடு

சேலத்தில் நாளை உணவு திருவிழா நடக்கிறது. இதையொட்டி உலக சாதனைகள் நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-07-14 21:46 GMT

சேலம், 

சேலம் மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான உணவு வகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நாளை (சனிக்கிழமை) உணவு திருவிழா நடத்தப்படுகிறது. சேலம் வரலட்சுமி திருமண மண்டபத்தில் நாளை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த உணவு திருவிழாவில், 250 பெண்கள் 2 நிமிடத்தில் 500 வகையான உணவுகளை அடுப்பு இல்லாமல் செய்தும், ஒரே இடத்தில் உலகின் மிகப்பெரிய அச்சு வெல்லம், மண்ட வெல்லம் தயாரித்து உலக சாதனை நிகழ்த்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த உணவு திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. இதில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் உணவு திருவிழாவை சிறப்பான முறையில் நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிவரன் கூறுகையில், சேலத்தில் நடத்தப்படும் உணவு திருவிழாவை முன்னிட்டு நாளை காலை 7 மணிக்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடக்கிறது. அதனை தொடர்ந்து வரலட்சுமி திருமண மண்டபத்தில் உணவு திருவிழா நடைபெற உள்ளது. இதில், கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர், மேயர், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலரும் கலந்து கொள்கிறார்கள். உணவு திருவிழாவில் 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைத்து பல வகையான சைவம், அசைவம் உணவுகள் தயாரிக்கப்படுகிறது, என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்