"நாளை, நாளை மறுநாள் ஆவின் பால் தடையின்றி கிடைக்கும்" - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் நாளை மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Update: 2023-12-02 17:53 GMT

கோப்புப்படம்

சென்னை,

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மிக்ஜம் புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் டிசம்பர் 4-ம் தேதி தமிழகம் மற்றும் ஆந்திராவை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் புயலால் தமிழகத்தில் பல பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் நாளை மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் சூறாவளியால் ஏற்படும் கனமழையின் போது, தேவைப்படும் எண்ணிக்கையிலான சுகாதாரப் பணியாளர்கள் 24 மணி நேரமும் இருக்க வேண்டும் என்றும் மருத்துவக் குழு, மருத்துவ அலுவலர், பணியாளர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் ஆகியோர் வெள்ளப் பாதிப்பு அதிக பாதிக்கப்படக்கூடிய தாழ்வான பகுதிகளுக்கு அத்தியாவசிய மருந்துகளுடன் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் புயல் மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை காவல்துறை சார்பில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டிருந்தன.

அதில், புயல் கரையை கடந்துவிட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிக அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வரக் கூடாது என்றும் கனமழை அல்லது இடியுடன் கூடிய மழையின் போது வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், பயணம் செய்ய வேண்டியிருந்தால், பொது போக்குவரத்து அல்லது நம்பகமான வாகனத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும், இடி, புயலின் போது எலெக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் மின்கம்பங்கள், கம்பிகள், உலோகப் பொருள்கள் அல்லது மின்னலை ஈர்க்கக்கூடிய கட்டமைப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்றும், விழுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொட வேண்டாம், அதன் அருகில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆவின் பால் தங்கு தடை இன்றி கிடைக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இதன்படி நாளை, நாளை மறுநாள் ஆவின் பால் தடையின்றி கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே புயல் கால அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி

அவசர நிலைகளுக்கு தொலைபேசி எண்.100-ஐ அழைக்கவும்.

புயல் காரணமாக அவசர உதவி மற்றும் இடர் ஏற்பட்டால், காவல்துறை அவசர உதவி எண்.100 (அ) 112-ஐ அழைக்கவும்.

சென்னை பெருநகர மாநகராட்சி உதவி எண்.1913-ஐ அழைக்கவும்.

தீயணைப்பு மற்றும் மீட்பு குழு அவசர உதவி எண்.101 ஆகியவற்றில் பொதுமக்கள்தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்