தக்காளி கிலோ ரூ.135-க்கு விற்பனை
கோவையில் கிடுகிடுவென விலை உயர்ந்து ஒரு கிலோ தக்காளி ரூ.135-க்கு விற்பனையானது. காய்கறிகளின் விலையும் அதிகரித்து இருக்கிறது.;
கோவை
கோவையில் கிடுகிடுவென விலை உயர்ந்து ஒரு கிலோ தக்காளி ரூ.135-க்கு விற்பனையானது. காய்கறிகளின் விலையும் அதிகரித்து இருக்கிறது.
தக்காளி விலை உயர்வு
தமிழகத்தில் தக்காளியின் விலை உயர்ந்து இருக்கிறது. ஆந்திரா, கர்நாடக மாநிலத்தில் இருந்து தக்காளியின் வரத்து குறைந்ததால் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவையில் தக்காளி கிலோ ரூ.110 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் நேற்று அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து ரூ.135 ஆக விற்பனையானது. கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மொத்த மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக தக்காளி மொத்த விலையே கிலோ ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனையானது. இதனால் சில்லரை விற்பனையும் அதிகரித்து உள்ளது.
கிலோ ரூ.135-க்கு விற்பனை
மளிகை கடைகளில் ரூ.130 முதல் ரூ.135 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விற்பனைதான் விலை உயர்ந்து இருக்கிறது என்றாலும், பிற காய்கறிகளின் விலையும் உயர்ந்து இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். குறிப்பாக பீன்ஸ், கேரட் விலையும் அதிகரித்தது.
கோவையில் சிங்காநல்லூர், ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் உழவர் சந்தை இருக்கிறது. இந்த உழவர் சந்தையில் நாட்டு தக்காளி கிலோ ரூ.100 முதல் ரூ.104 வரை விற்பனை செய்யப்பட்டது. பிற மார்க்கெட்டுகளில் ஆப்பிள் தக்காளி அதிகபட்சமாக கிலோ ரூ.140-க்கு விற்பனையானது. கூட்டுறவுத்துறை சார்பில் நடத்தப்படும் பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
வரத்து குறைவு
பொதுவாக இந்த காலக்கட்டத்தில் ஆந்திரா, கர்நாடக மாநிலத்தில் இருந்துதான் தக்காளி அதிகளவில் வரும். ஆனால் அவற்றின் வரத்து மிகவும் குறைந்துவிட்டது. இதுதான் விலை உயர்வுக்கு காரணம். அதுபோன்று பிற காய்கறிகளின் வரத்தும் குறைவாகதான் இருக்கிறது. இதனால் அதன் விலையும் உயர்ந்து இருக்கிறது.
கத்தரி கிலோ ரூ.90, பீன்ஸ் ரூ.120, கேரட் ரூ.100 என்று விற்பனையானது. காய்கறிகளின் தேவைக்கு ஏற்ப அதன் வரத்து இல்லை. ஒருவாரத்தில் இந்த விலை உயர்வு சரியாகிவிடும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.