மீண்டும் அதிகரித்த தக்காளி விலை

அதிகரித்த தக்காளி விலை மீண்டும் அதிகரித்தது.;

Update: 2023-07-29 20:50 GMT

தக்காளி விலை அதிகரிப்பு

திருச்சி காந்திமார்க்கெட்டில் இருந்து திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு காய்கனிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் இருந்து தக்காளி வருகிறது. தினமும் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பெட்டிகளில் (ஒரு பெட்டியில் 25 கிலோ தக்காளி இருக்கும்) தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

ஆனால் தற்போது 2,000 முதல் 2,500 பெட்டிகளே விற்பனைக்கு வருகின்றன. வரத்து குறைந்த காரணத்தால் கடந்த சில நாட்களாக திருச்சியில் தக்காளி விலை தாறுமாறாக அதிகரித்து வருகிறது.

இல்லத்தரசிகள் அதிர்ச்சி

தற்போது தமிழகத்தில் தக்காளி விளைச்சல் இல்லை. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து தான் தக்காளி விற்பனைக்கு வருகிறது. உள்ளூரில் ஒருசில இடங்களில் மட்டும்தான் தக்காளி தற்போது அறுவடை செய்யப்படுகிறது. தேவை அதிகமாக உள்ள நிலையில் வரத்து குறைவாக இருப்பதால் விலை கடுமையாக உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களாக ரூ.100 முதல் ரூ.130 வரை விற்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் மீண்டும் தக்காளி விலை உயா்ந்துள்ளது.

இதனால் திருச்சி காந்தி மார்க்கெட்டில் நேற்று 25 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.2500 முதல் ரூ.2600 வரை விலை போனது. அதே நேரத்தில் ஒரு கிலோ தக்காளி சில்லரை விலையில் ரூ.130 முதல் ரூ.150 வரை விற்கப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்