பாவூர்சத்திரம் சந்தையில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி

பாவூர்சத்திரம் சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்தது.

Update: 2023-09-08 18:45 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்தது.

தக்காளி விளைச்சல்

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் தக்காளி விளைச்சல் போதிய அளவில் இல்லாததால் அதன் விலையானது வரலாறு காணாத அளவில் உச்சத்தை தொட்டது. இதனால் குடும்ப பெண்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சந்தைகளாக விளங்கி வரும் பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை மார்க்கெட்டுகளிலும் அதன் விலையானது அதிகரித்தே இருந்தது. உள்ளூர் விவசாயிகளிடம் அதிக அளவில் தக்காளி விளைச்சல் இல்லாதது முக்கிய காரணமாக இருந்தது.

தக்காளி விலையேற்றத்தை அறிந்து பாவூர்சத்திரம், வீரகேரளம்புதூர் சுரண்டை, இலத்தூர், ஆலங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிட தொடங்கினர்.

விலை வீழ்ச்சி

குறிப்பாக வீரகேரளம்புதூர் பகுதியில் அதிகளவில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டதன் காரணமாக தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளது. பாவூர்சத்திரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் தினசரி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகளவில் இருப்பதால் அதன் விலையானது கிலோ 10 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

தொடர்ந்து தக்காளி விளைச்சல் அதிகரிப்பால் மேலும் இதன் விலை வீழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

தென்காசி மாவட்ட விவசாயிகள் அறுவடை செய்யும் தக்காளி பழங்கள் தற்போது அண்டை மாநிலமான கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. விளைச்சல் அதிகம் இருக்கும் வேளாண்மை பொருட்களை கொள்முதல் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்