தக்காளி விலை வீழ்ச்சி
கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்தது. கிலோ ரூ.15-க்கு ஏலம் போனது.;
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்தது. கிலோ ரூ.15-க்கு ஏலம் போனது.
தினசரி சந்தை
கிணத்துக்கடவு பஸ் நிலையம் பகுதியில் தினசரி காய்கறி சந்தை உள்ளது. இங்கு கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில் அறுவடை செய்யப்படும் தக்காளிகளை கொண்டு வந்து விவசாயிகள் ஏலம் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். இந்த மாத தொடக்கத்தில் தக்காளி விலை ஒரு கிலோ 36 ரூபாய்க்கு ஏலம் போனது. இதனால் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.50 வரைக்கும் விற்பனையானது.
இந்த நிலையில் கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் நேற்று ஏலம் நடைபெற்றது. இதில் 20 டன் தக்காளி விற்பனைக்கு வந்திருந்தது. ஏலத்தில் தக்காளி விலை யாரும் எதிர்பாராத அளவிற்கு அதிரடியாக வீழ்ச்சியடைந்தது.
கவலை
அதன்படி நேற்று நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ தக்காளி 15 ரூபாய்க்கு ஏலம் போனது. இதனால் சந்தைக்கு தக்காளிகளை விற்பனை செய்ய கொண்டு வந்த விவசாயிகள் கவலை அடைந்தனர். தற்போது தக்காளி சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
தக்காளி விவசாயம் செய்வதற்கு ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகும். தற்போது நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ தக்காளி 15 ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. இது மிக குறைந்த விலையாகும். இந்த விலையினால் எங்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விலை வீழ்ச்சியடைவதை தடுக்க ஒரு குறிப்பிட்ட விலையை அரசு நிர்ணயம் செய்து விவசாயிகளை நஷ்டத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.