உழவர் சந்தைகளுக்கு வரத்து அதிகரிப்பால்தக்காளி விலை கடும் வீழ்ச்சிகிலோ ரூ.10-க்கு விற்பனை
சேலத்தில் உழவர் சந்தைகளுக்கு வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சேலம்
சேலத்தில் உழவர் சந்தைகளுக்கு வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தக்காளி விலை சரிவு
சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், வாழப்பாடி, தம்மம்பட்டி, மேச்சேரி, மேட்டூர், ஓமலூர் உள்பட பல்வேறு இடங்களில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் அதன் விலை கிலோவுக்கு ரூ.130-யை தாண்டி விற்பனையானது. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்தனர்.
இந்த நிலையில் தற்போது தக்காளி விளைச்சல் அமோகமாக உள்ளதால் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தக்காளியை விற்பனைக்காக அதிகளவு கொண்டு வருகின்றனர். குறிப்பாக சேலம் மார்க்கெட்டுகளுக்கு ஆந்திராவில் இருந்தும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்தது.
ரூ.10-க்கு விற்பனை
உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.10 முதல் ரூ.13 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட்டுகளில் ரூ.15 வரை விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் கூடுதலாக தக்காளியை வாங்கி செல்கின்றனர். இதேபோல் வெண்டைக்காய் வரத்தும் அதிகரித்துள்ளதால் கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் மற்ற காய்கறிகளின் வரத்தும் அதிகரித்துள்ளதால் அதன் விலையும் குறைந்து காணப்படுகிறது. கத்திரிக்காய் கிலோ ரூ.25-க்கும், சுரக்காய் ரூ.15-க்கும், பாகற்காய் ரூ.25-க்கும், முள்ளங்கி ரூ.20-க்கும், அவரை ரூ.40-க்கும், பீன்ஸ் ரூ.85-க்கும், கேரட் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.