சீர்காழி ரெயில் நிலையத்தில் திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் கழிவறை கட்டிடம்

சீர்காழி ரெயில் நிலையத்தில் 10 ஆண்டுகளுக்குமுன்பு கட்டப்பட்ட கழிவறை திறப்பு விழாவுக்காக பூட்டியே கிடக்கிறது. இது பயன்பாட்டுக்கு வருவது எப்போது என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2022-10-10 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி ரெயில் நிலையத்தில் 10 ஆண்டுகளுக்குமுன்பு கட்டப்பட்ட கழிவறை திறப்பு விழாவுக்காக பூட்டியே கிடக்கிறது. இது பயன்பாட்டுக்கு வருவது எப்போது என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

சுற்றுலா தலம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் செவ்வாய் தலம், திருவெண்காடு பகுதியில் புதன் தலம், கீழ பெரும்பள்ளம் பகுதியில் கேது பகவான் தலம் ஆகியவை உள்ளன. இதேபோல் பூம்புகார் சுற்றுலா தலம் மற்றும் மீன்பிடி துறைமுகம், பழையார் மீன்பிடி துறைமுகம், திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுகம் ஆகியவை உள்ளன.

மேலும் முக்கிய கோவிலான சீர்காழி தாடாளன் பெருமாள் கோவில், அண்ணன் பெருமாள் கோவில், குறவளூர் உக்கிரம நரசிம்ம பெருமாள் கோவில், நாங்கூர் மதங்கீஸ்வரர் பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்கள், சுற்றுலா தலங்கள் உள்ளன.

ரெயில் நிலையத்தில் கழிவறை கட்டிடம்

இந்த பகுதிகளில் உள்ள கோவில்கள் மற்றும் சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்டவைகளுக்கு வெளியூரில் இருந்து ரெயில்கள் மூலம் மக்கள் வருகின்றனர். பின்னர் அவர்கள் பஸ்கள் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்கின்றனர். இதனால் சீர்காழி ரெயில் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.

இந்த நிலையில் சீர்காழி ரெயில் நிலையத்தில் பயணிகள் பயன்பாட்டிற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கழிவறை கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் இதுவரை அந்த கட்டிடம் திறக்கப்படாமல் காட்சி பொருளாக காணப்படுகிறது.

பயன்பாட்டுக்கு விட வேண்டும்

கழிவறை கட்டிடம் திறக்கப்படாததால் பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக பெண்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். ெரயில் நிலைய வளாகத்தில் பொது இடங்களில் சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீர்காழி ரெயில் நிலையத்தில் திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் கழிவறை கட்டிடத்தை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்