திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் இன்று பிளஸ்-2 மாணவர்கள் சான்றிதழ் பெற சிறப்பு முகாம்
திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் இன்று பிளஸ்-2 மாணவர்கள் சான்றிதழ் பெற சிறப்பு முகாம் நடைபெற உள்ளது
திருமங்கலம்,
பிளஸ்-2 முடித்து மேல்நிலை கல்வியில் சேர உள்ள மாணவர்களுக்கான சான்றிதழ்களை விரைவில் பெறுவதற்காக இன்று(வெள்ளிக்கிழமை) ஒரு நாள் சிறப்பு முகாம் திருமங்கலம் செக்கானூரணியில் நடைபெற உள்ளது. இதுகுறித்து தாசில்தார் சிவராமன் கூறியதாவது, பிளஸ்-2 முடித்து பின்பு மேல்நிலை கல்வியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தேவைப்படும் சாதி சான்றிதழ்கள், இருப்பிட சான்றிதழ்கள், முதல் பட்டதாரி சான்றிதழ்கள், ஓ.பி.சி. சான்றிதழ்கள் உள்ளிட்டவை பெற ஒரே நாளில் கிடைக்கும் வகையில் சிறப்பு முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி திருமங்கலம் தாலுகாவில் 2 இடங்களில் இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. திருமங்கலம் பி.கே.என். ஆண்கள் மேல்நிலை பள்ளியிலும், செக்கானூரணி அரசு கள்ளர் மேல்நிலை பள்ளியிலும் நடைபெற உள்ளது. இதில் பிளஸ்-2 மாணவர்கள் ஆதார், டி.சி. உள்ளிட்ட உரிய ஆவணங்களை கொண்டு வந்து தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை வாங்கி கொள்ளலாம். காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த முகாம் மாலை 4 மணி வரை நடைபெறும் என்றார்.