ஸ்கூட்டரில் 31 கிலோ புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது
தஞ்சையில் வாகன சோதனையின் போது ஸ்கூட்டரில் 31 கிலோ புகையிலை பொருட்களை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
தஞ்சாவூர்;
தஞ்சையில் வாகன சோதனையின் போது ஸ்கூட்டரில் 31 கிலோ புகையிலை பொருட்களை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புகையிலை பொருட்கள்
தஞ்சையில் கஞ்சா, புகையிலை பொருட்கள் உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை நடைபெறுவதை தடுக்கவும், அவற்றை வேறு ஊர்களுக்கு கடத்தி செல்வதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவிட்டார்.அதன் பேரில் அந்தந்த சரக பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி எஸ்.பி. ஆனந்தம் நகர் பகுதியில் தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக மூட்டையுடன் வந்த ஒரு ஸ்கூட்டரை வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர்.
31 கிலோ புகையிலை பொருட்கள்
அதில் இருந்த மூட்டையை அவிழ்த்து பார்த்த போது ரூ.60 ஆயிரம் மதிப்பிலான 31 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்கூட்டரை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தஞ்சை கரந்தை வலம்புரி தெருவை சேர்ந்த மகேஸ்வரன் (வயது 35) என்பதும், விற்பனைக்காக புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரனை கைது செய்து, புகையிலை பொருட்கள் மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர். மேலும் பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்டதா?, எந்த பகுதியில் யாரிடம் இருந்து வாங்கி வந்தார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.