மார்த்தாண்டம் அருகே நகைக்கடை உரிமையாளர் மனைவியிடம் 15 பவுன் சங்கிலி பறிப்பு
மார்த்தாண்டம் அருகே நகைக்கடை உரிமையாளரின் மனைவியிடம் 15 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.;
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே நகைக்கடை உரிமையாளரின் மனைவியிடம் 15 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நகைக்கடை உரிமையாளர்
மார்த்தாண்டம் அருகே முள்ளஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் வினு (வயது 33). இவருடைய மனைவி அனுஷா (30). வினு மார்த்தாண்டம் அருகே மாமூட்டுக்கடை பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் மாலையில் அனுஷா வீட்டு அருகில் உள்ள கடையில் ெபாருட்கள் வாங்க சென்றார். அப்போது அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது.
15 பவுன் சங்கிலி பறிப்பு
அப்போது ஒரு மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் திடீரென்று மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்தி விட்டு நடந்து சென்று அனுஷா கழுத்தில் கிடந்த 15 பவுன் சங்கிலியை பறித்தார்.
உடனே அனுஷா திருடன்... திருடன்... என்று கத்தினார். அந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டார்.
போலீஸ் தேடுகிறது
இதுபற்றி அனுஷா மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் விசாரணை நடத்தி நகையை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.