வன விவசாயிகளை வெளியேற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்

வன விவசாயிகளை வெளியேற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கலந்தாலோசனை கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.;

Update: 2022-06-09 16:54 GMT

கலந்தாலோசனை கூட்டம்

தேனி மாவட்டம், வருசநாடு அருகே வனப்பகுதிகளில் வசிக்கும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்றும், அவர்களை வனத்தில் இருந்து வெளியேற்றவும் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மக்களை வெளியேற்றுவது, அவர்களுக்கு மறுகுடியமர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து விவசாயிகளுடனான கலந்தாலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்  நடந்தது.

கூட்டத்துக்கு தமிழக அரசின் முதன்மை தலைமை வன பாதுகாவலர் முகமது முஜ்முல் அப்பாஸ் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட கலெக்டர் முரளிதரன் முன்னிலை வகித்தார். மேகமலை-ஸ்ரீவில்லிப்புத்தூர் புலிகள் காப்பக கள இயக்குனர் தீபக் பில்ஜி, கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி அடுத்த மாதம் (ஜூலை) 17-ந்தேதிக்குள் மக்களை வனத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதால், மறுகுடியமர்வுக்காக மாவட்ட நிர்வாகம் செய்துள்ள ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார்.

மேல்முறையீடு

அப்போது விவசாயிகள் தரப்பில், தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் பேசுகையில், "சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு என்பது வன உரிமைச்சட்டம் 2006-ன் கீழ் வழங்கப்படவில்லை. அது, 1984-ம் ஆண்டு தமிழக வனச்சட்டம், 1980-ம் ஆண்டு வன பாதுகாப்பு சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தீர்ப்புக்கு தமிழக அரசு மேல்முறையீடு செய்வதற்கு எல்லா அடிப்படை காரணங்களும் உள்ளன. எனவே, மறுகுடியமர்வு பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு, காலம் காலமாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இந்த தீர்ப்புக்கு தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்" என்றார்.

இதே கோரிக்கைகளை விவசாயிகள் பலரும் வலியுறுத்தினர். மேலும் விவசாயிகள் சிலர் பேசும்போது, "சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை காரணம் காட்டி மஞ்சனூத்து சோதனை சாவடி வழியாக ஆம்புலன்சு செல்வதற்கு கூட வனத்துறையினர் அனுமதி மறுக்கின்றனர். எனவே, விவசாயிகளை தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும். மலைமாடுகளுக்கு மேய்ச்சல் உரிமம் பறிபோனது தொடர்பாக ஐகோர்ட்டில் தீர்ப்பிலும் விவசாயிகள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் விவசாயிகளுக்கு அரணாக அரசு இருக்க வேண்டும்" என்றனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ.க்கள் பேசும்போது, இந்த விவகாரம் தொடர்பாக வனத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து பேசி தீர்வு ஏற்பட நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, மேகமலை புலிகள் காப்பாக துணை இயக்குனர் ஆனந்த், மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்