ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்துக்கு பணியாளர்களை நியமிக்க வேண்டும்: குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்துக்கு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.;
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் பங்கேற்று மனுக்கள் கொடுத்தனர். இதில், ஜெய்பீம் புரட்சிப்புலிகள் அமைப்பின் தலைவர் அருந்தமிழரசு தலைமையில், மாநில பொதுச்செயலாளர் பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், "தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கு மாநில அளவில் பணியாளர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது.
இதனால் இந்த ஆணையத்துக்கு வந்த புகார் மனுக்கள் மீதான நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளது. வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியும் முடங்கி உள்ளது. எனவே பணியாளர்களை நியமிக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர். அதுபோல், அல்லிநகரத்தில் பழமையான புளிய மரத்தை வேரோடு அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநில பொறுப்பாளர் தமிழரசியும் மனு கொடுத்தார்.