பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே முதல் இடம் பிடிக்க வேண்டும்
பொதுத்தேர்வில் திருப்பத்தூர் மாவட்டம், மாநிலத்திலேயே முதலிடம் பிடிக்க அனைத்து முயற்சிகளையும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி அறிவுறுத்தினார்.;
பயிலரங்கம்
வாணியம்பாடியில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம், மருதர்கேசரி மகளிர் கல்லூரி மற்றும் படித்துறை புத்தக பிரிவு சார்பில் பயிலரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமை தாங்கினார். வாணியம்பாடி தொகுதி கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்து பேசினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார், கல்லூரி முதல்வர் இன்பவள்ளி, எழுத்தாளர் ஜெயபாஸ்கரன், விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் மொழி எனும் பெரும் வரம் என்ற தலைப்பில் தமிழ் ஆசிரியை பரிமளா தேவியும், கற்போம் கற்பிப்போம் அறிவியல் என்ற தலைப்பில் வெங்கடேஸ்வரனும் பேசினர்.
மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி பேசியதாவது:-
முதல் இடம்
திருப்பத்தூர் மாவட்டம் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகிறது. மாணவர்கள் ஒவ்வொருவரையும் சிறந்தவர்களாக உருவாக்க ஆசிரியர்கள் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும். ஒவ்வொரு நல்ல மாணவனையும் ஒரு டாக்டராக, விஞ்ஞானியாக, ஒரு கல்லூரி முதல்வராக, ஆசிரியராக மாற்றும் பணிகள் அனைத்தும் உங்கள் கையில் தான் உள்ளது.
ஆதலால் வருகின்ற 2023-24 பொதுத் தேர்வில் சிறப்பான மாணவர்களை உருவாக்கிட வேண்டும். இந்த ஆண்டு 10, 11, 12-ம் வகுப்பு தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும், வருகின்ற பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற மாணவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்ற பெயரை எடுக்கும் வகையில் ஆசிரியர்கள் அனைவரும் பணியாற்ற வேண்டும், அப்போது தான் நாம் மாணவர்களுக்கு கற்பித்து தரும் கல்வி அறிவை மென்மேலும் உயர்த்த முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி, ராமசாமி, சிவானந்தம் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் படித்துறை புத்தகத் தலைவர் இளம்பருதி நன்றி கூறினார்.