நிலுவை வழக்குகளை தீர்த்து வைப்பதே சமரச மையத்தின் முக்கிய பணி
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளை எடுத்து சமரச மையத்தால் தீர்த்து வைப்பது முக்கிய பணியாக செயல்படுகிறது என்று மாவட்ட முதன்மை நீதிபதி பல்கீஸ் தெரிவித்தார்.;
18-வது ஆண்டு சமரச தின விழா
18-வது ஆண்டு சமரச தின விழா பெரம்பலூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான பல்கீஸ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட கலெக்டர் கற்பகம், போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். கலெக்டர் கற்பகம் குத்துவிளக்கு ஏற்றி சமரச மைய விளம்பர பலகையை திறந்து வைத்தார். விழாவில் சமரச மையம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை முதன்மை நீதிபதி பல்கீஸ் வழங்க கலெக்டர் கற்பகம் பெற்றுக்கொண்டார்.
மேல்முறையீடு கிடையாது
விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி பல்கீஸ் பேசுகையில், சமரச மையம் உச்ச நீதிமன்ற உத்தரவின்படியும், உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் படியும் மத்தியஸ்தர்கள் முன்னிலையில் இயங்கி வருகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளை எடுத்து சமரச மையத்தால் தீர்த்து வைப்பது முக்கிய பணியாக செயல்படுகிறது. சமரசம் என்பது ஒரு ஞானம் ஆகும். சமரசம் செய்யும் போது இருவரும் மனம் பொருந்தி விட்டுக்கொடுத்து தீர்வு காணப்படும். சமரச மையத்தில் காணப்படும் தீர்வுகளுக்கு மேல்முறையீடு கிடையாது, என்றார். கலெக்டர் கற்பகம் பேசுகையில், நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் வழக்குகளை சுமுகமாக முடித்து வைப்பதற்காக நீதித்துறை ஒரு சிறந்த அங்கமாக உள்ளது. வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட பெரம்பலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்த எண்களை வாய்தாவிற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக தெரிவித்தால் அந்த வழக்குகளை முடித்து கொடுக்க வருவாய்த்துறை சம்பந்தமாக அனைத்து ஒத்துழைப்பும் வழங்கப்படும்.
மேலும் அதிக வழக்குகளை சமரச முறையில் தீர்ப்பதற்கும், சமரச தீர்வு மையம் குறித்து கிராம ஊராட்சி தலைவர்கள் மூலமாக போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக முழு ஒத்துழைப்பு வழங்கப்படும், என்றார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
இதில் மாவட்ட நீதிபதிகள், ஏனைய நீதிபதிகள், அரசு வக்கீல்கள், வக்கீல் சங்க பிரதிநிதிகள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சமரச மைய ஒருங்கிணைப்பாளரும், சார்பு நீதிபதியுமாகிய அண்ணாமலை வரவேற்றார். முடிவில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மூர்த்தி நன்றி கூறினார். பின்னர் மாலையில் நடந்த சமரச தின விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி பல்கீஸ், போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடையே சமரச மையம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.