நெல் விதைகளை விற்பனை செய்ய வேண்டும்

கோடை சாகுபடிக்கு ஏற்ற நெல் விதைகளை விற்பனை செய்ய வேண்டும்.

Update: 2023-02-15 19:52 GMT


விருதுநகர் விதை ஆய்வு துணை இயக்குனர் வனஜா கூறியதாவது:-

மாவட்டத்தில் சம்பா பருவ நெல் அறுவடைக்கு பின் கோடைகால நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு வட்டாரங்களில் கோடைநெல் சாகுபடி மேற்கொள்ள உள்ளனர்.

இந்தநிைலயில் தனியார் விதை விற்பனையாளர்கள், சான்று விதைகளில் இரு அட்டைகள் அதாவது சான்று அட்டை, வெள்ளை அல்லது நீல நிறம் மற்றும் உற்பத்தியாளர் அட்டை பொருத்தப்பட்ட விதைகளை விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய வேண்டும்.

சான்று அட்டையில் ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள், பயிர் செய்ய ஏற்ற விவரம், உற்பத்தியாளர் விவரம் உள்ளிட்ட 14 வகையான விவரங்கள் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். குறுகிய கால நெல் ரகங்களான ஏ.எஸ்.டி. 16 டி.பி.எஸ்.5 போன்ற தரமான ரகங்களை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு விதை சட்ட விதிகளின்படி வினியோகம் செய்ய வேண்டும்.

விதை விற்பனையாளர்கள் விதைகளை விற்பனை செய்யும் பொழுது விவசாயிகளுக்கு கட்டாயம் விதை குவியல் விவரம் குறிப்பிட்டு விற்பனை ரசீது வழங்க வேண்டும்.

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு வட்டார பகுதிகளில் விதை ஆய்வாளர்களால் அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் கோடைசாகுபடிக்கு கொள்முதல் செய்து இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் குவியல்களில் விதை மாதிரிகள் சேகரம் செய்து ஆய்வுக்காக பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே கோடை பருவத்திற்கு உகந்தது அல்லாத நெல் ரகங்களை வினியோகம் செய்தாலோ அல்லது வினியோகத்தில் விதிமுறைகள் மீறல் கண்டறியப்பட்டாலோ விதைகள் சட்டப்படி விதை கட்டுப்பாட்டு உத்தரவு 1983-ன்படி சம்பந்தப்பட்டவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்