கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்துவதை தடுக்கக்கோரிவிவசாயிகளுடன் பா.ஜனதாவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முயற்சி-அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் தற்காலிகமாக ஒத்திவைப்பு
கேரளாவுக்கு கல்குவாரிகளில் இருந்து கனிமவளங்கள் கடத்துவதை தடுக்கக் கோரி விவசாயிகளுடன் பா.ஜனதாவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களுடன் அதிகாரிகள் நடத்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.;
கிணத்துக்கடவு=
கேரளாவுக்கு கல்குவாரிகளில் இருந்து கனிமவளங்கள் கடத்துவதை தடுக்கக் கோரி விவசாயிகளுடன் பா.ஜனதாவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களுடன் அதிகாரிகள் நடத்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு
கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கல்குவாரிகளிலிருந்து கேரளாவுக்கு அளவுக்கு அதிகமாக கனிம வளங்கள் ஏற்றி செல்வதாகவும் கல்குவாரிகளில் விதிகளை மீறி வெடி வெடிப்பதால் கற்கள் சிதறி விளைநிலங்களுக்குள் விழுவதால் விவசாய பயிர்கள் சேதம் அடைவதாகவும், வீடுகளில் சுவர்களில் விரிசல் ஏற்படுவதாகவும் ஏற்கனவே பா.ஜனதா கட்சி சார்பில் புகார் தெரிவித்து அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்து உள்ளனர். மேலும் கனரக வாகனங்கள் செல்வதால் சாலைகள் சேதமடைந்துள்ளது. அதனால் விரைந்து சாலையை சீரமைக்க வழியுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் சார்பில் மாவட்டத் தலைவர் வசந்த ராஜன் தலைமையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.
பேச்சுவார்த்தை
அதன்படி கிணத்துக்கடவு அருகே உள்ள மூலக்கடையில் சாலையோரம் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட பா.ஜனதாவினர், விவசாயிகள் திரண்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ராஜபாண்டியன், வெற்றிச்செல்வன், கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், கிணத்துக்கடவு வருவாய் ஆய்வாளர் கோபிலலிதா, பொட்டையாண்டிபுறம் கிராமநிர்வாக அதிகாரி பாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, தொடர் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபடவேண்டாம். இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர். இதனையடுத்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட வந்த பா.ஜனதா கட்சியினர், விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.