உதவித்தொகை பெறுவதற்கு முதியவர்கள் அலைக்கழிப்பு-உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
உதவித்தொகை பெறுவதற்கு முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிப்பதாக புகார் எழுந்து உள்ளது. அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.;
பொள்ளாச்சி
உதவித்தொகை பெறுவதற்கு முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிப்பதாக புகார் எழுந்து உள்ளது. அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
உதவித்தொகை
60 வயதிற்கு மேல் உள்ள ஆதரவற்ற முதியவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரில் உள்ள ஒரு வங்கி மூலம் சின்னாறுபதி, புளியங்கண்டி, நெல்லித்துறை மன்னம், பந்தல்கால் அம்மன்பதி, அன்பு நகர், ஆழியாறு, நவமலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் முதியவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக வங்கி ஊழியர் ஒருவர் நியமிக்கப்பட்டு, முதியவர்களை அங்கு வரவழைத்து உதவித்தொகையை வழங்குகின்றனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என சுமார் 300 பேர் வங்கிக்கு உதவித்தொகை பெறுவதற்கு வந்து உள்ளனர். ஆனால் குறைவான நபர்களுக்கு மட்டும் உதவித்தொகையை கொடுத்து விட்டு மறுநாள் வர சொல்லி அலைக்கழிப்பதாக புகார் எழுந்து உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
அலைக்கழிப்பு
மாதந்தோறும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிகள் மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. கோட்டூரில் உள்ள வங்கிக்கு பின்புறம் உள்ள இட்டேரியில் வைத்து தினசரி குறைவான நபர்களுக்கு மட்டும் உதவித்தொகையை வழங்குகின்றனர். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளால் தினமும் பஸ் ஏறி வந்து செல்ல முடியவில்லை. இதற்கிடையில் பணம் கொடுக்கும் இடத்தில் குடிநீர் வசதி கூட இல்லாமல் சிரமப்படுகின்றனர். இதனால் தினமும் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
சுமார் 300 பேருக்கு ஒரே ஒரு நபர் மட்டும் பணம் கொடுப்பதால் காலதாமதம் ஏற்படுகிறது. இதை வருவாய் துறை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. எனவே முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்காமல் ஒவ்வொரு கிராமத்துக்கும் நேரடியாக சென்று அங்கு வைத்து உதவித்தொகையை வழங்க வேண்டும். இல்லையெனில் கூட்ட நெரிசலை தடுக்க தினமும் 2 கிராமங்கள் வீதம் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.