வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக எலக்ட்ரீசியனிடம் ரூ.1½ லட்சம் மோசடி :7 பேர் மீது வழக்கு
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக எலக்ட்ரீசியனிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்த 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வெளிநாட்டில் வேலை
பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்தவர் கஜேந்திரகுமார் (வயது 36). எலக்ட்ரீசியன். இவர், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் ேடாங்கரேவிடம் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், பெரியகுளம் கோட்டைமேடு சர்ச் தெருவை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் அறிமுகம் ஆனார்.
அப்போது அவரது மனைவி மேரி, சண்முகசுந்தரம், ரவி பால், அல்லிநகரத்தை சேர்ந்த ஸ்டீபன் பாபு, சாமுவேல் ஆகியோர் உடனிருந்தனர். அவர்கள் எனக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினர். மேலும் இந்த வேலைக்காக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறினார். இதை நம்பிய நான் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை அவர்களிடம் கொடுத்தேன்.
மோசடி
அதன்பிறகு அவர்களை செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து நேரில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் எந்த பதிலும் சொல்லவில்லை. இதனால் நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். ஆனால் அவர்கள் வாங்கிய பணத்தை திருப்பி தருவதாக கூறி இழுத்தடித்தனர்.
அப்போது தான் நான் ஏமாற்றபட்டத்தை அறிந்தேன். எனவே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும்படி பெரியகுளம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் ஜெயராஜ் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.