கோபி அருகே வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரிஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திடீர் போராட்டம்
கோபி அருகே வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
கோபி அருகே வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம்
கோபிசெட்டிபாளையம் அருகே கரட்டுப்பாளையம் மேட்டுக்காடு பகுதியில் வழிப்பாதையை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், அந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்றுக்கூறி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் மனு கொடுத்தனர்.
இந்தநிலையில் நாம் தமிழர் கட்சி ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் தாண்டவமுர்த்தி தலைமையில் பொதுமக்கள் நேற்று புகார் மனு கொடுப்பதற்காக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது புகார் மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றுக்கூறி போலீஸ் சூப்பிரண்டு வளாகத்தில் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திடீரென காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
ஆக்கிரமிப்பு
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தெய்வராணி, கோமதி மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-
கரட்டுப்பாளையம் மேட்டுக்காடு பகுதியில் உள்ள வழிப்பாதையை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து உள்ளார்.
இதுதொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்து உள்ளோம். இந்தநிலையில் கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆக்கிரமிப்பு தொடர்பான உத்தரவு நகலை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அந்த உத்தரவு நகல் கிடைத்தவுடன் அதில் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். மேலும், அந்த பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி திரண்டோம். அப்போது அங்குள்ளவர்கள் எங்களை தாக்கினார்கள். இதில் ஒருவர் காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அதேசமயம் எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் கொடுத்த பொய்யான புகாரின்பேரில் 3 பெண்கள் உள்பட 6 பேரை கடத்தூர் போலீசார் கைது செய்தனர். ஆனால் நாங்கள் கொடுத்த புகாரின்மீது போலீசார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருகிறார்கள். எனவே பொய் புகாரை ரத்து செய்துவிட்டு ஆக்கிரமிப்பை அகற்றி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேச்சுவார்த்தை
அதற்கு போலீசார், "கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தி கொள்ளலாம்", என்று தெரிவித்தனர். அங்கு ஏற்கனவே பேச்சுவார்த்தைக்கு சென்றபோது, உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்பதால், உயர் அதிகாரிகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு பொதுமக்களிடம் பேசி சமாதானம் செய்த போலீசார், அவர்களை பேச்சுவார்த்தைக்காக கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தினால் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.