தமிழக கவர்னரை மாற்றக்கோரி மதுரையில் கருணாநிதி சிலை முன்பு தீக்குளிக்க முயன்ற தி.மு.க. நிர்வாகி கைது

தமிழக கவர்னரை மாற்றக்கோரி மதுரையில் கருணாநிதி சிலை முன்பு தீக்குளிக்க முயன்ற தி.மு.க. நிர்வாகி கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-06-28 21:19 GMT


தமிழக கவர்னரை மாற்றக்கோரி மதுரையில் கருணாநிதி சிலை முன்பு தீக்குளிக்க முயன்ற தி.மு.க. நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

கவர்னரை மாற்றக்கோரிக்கை

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு எதிராக ெசயல்படுகிறார் என்றும், இதனால் கவர்னரை மாற்ற வேண்டும் என்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் மதுரை மானகிரி பகுதியை சேர்ந்த ஆவின் தி.மு.க. தொழிற்சங்க தலைவரான கணேசன் சார்பில், மதுரையில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.

அதில், தமிழக கவர்னரை ஜூன் 27-ந் தேதிக்குள் மத்திய அரசு மாற்றாவிட்டால், 28-ந் தேதி மதுரை சிம்மக்கலில் உள்ள கருணாநிதி சிலை முன்பாக உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்து இறப்பேன் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த சுவரொட்டியை கண்ட போலீசார் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

கைது

இந்தநிலையில், நேற்று (28-ந்தேதி) கருணாநிதி சிலை பகுதிக்கு அவர் வரலாம் என்று கருதி போலீசார் உஷார்படுத்தப்பட்டு இருந்தனர். நேற்று காலை திடீரென்று கணேசன் காரில் அங்கு வந்தார்.

கருணாநிதி சிலை முன்பாக நின்று கொண்டு, மண்எண்ணெயை தனது தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அதைக்கண்ட போலீசார் ஓடிச்சென்று அவரை தடுத்து நிறுத்தினர். அவர் மீது தண்ணீரை ஊற்றினார்கள்.

தற்கொலைக்கு முயன்றதாக திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் மதுரையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்