விபத்துகளில் சிக்குவதை தவிர்க்கவனவிலங்குகள் நடமாடும் இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள்

ஆண்டிப்படி பகுதியில் விபத்துகளில் சிக்குவதை தடுக்க வனவிலங்குகள் நடமாடும் இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-30 18:45 GMT


ஆண்டிப்பட்டி அருகே வனப்பகுதிகளில் கரடி, வரையாடு, மான், மயில் போன்ற வன உயிரினங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் வன உயிரினங்கள் சாலையை கடக்கும் போது வாகனங்களில் அடிபட்டு பலியாகும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. வெளியூர்களில் இருந்து வரும் நபர்களுக்கு இங்கு வன விலங்குகள் நடமாட்டம் இருப்பது தெரிவது இல்லை. இதனால் அசுர வேகத்தில் வரும் வாகனங்களால் விபத்துகள் ஏற்பட்டு வந்தன. இதை தவிர்க்கும் வகையில், வன விலங்குகள் நடமாட்டம் உள்ள இடங்களில் அறிவிப்பு பதாகைகள் வைக்க மாவட்ட வன அலுவலர் சமர்த்தா அறிவுறுத்தினார்.

அதன்பேரில், மாவட்ட கவுரவ வனப்பாதுகாவலர் டாக்டர் ராஜ்குமார் பங்களிப்புடன், ஆண்டிப்பட்டி வனச்சரகர் அருள்குமார் தலைமையிலான வனத்துறையினர் ஆண்டிப்பட்டி வனச்சரக பகுதிகளில் உள்ள பல்வேறு சாலையோரம் விழிப்புணர்வு பதாகைகளை வைத்துள்ளனர். மதுரை சாலையில் கணவாய் பகுதியில் கரடிகள் நடமாட்டம் உள்ளதால் அங்கு கரடி புகைப்படத்துடன் கூடிய விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல், தேனி-மதுரை சாலையில் டி.சுப்புலாபுரம் பகுதியில் வரையாடு புகைப்படத்துடனும், ஆண்டிப்பட்டி-அனுப்பப்பட்டி சாலையில் மயில்கள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழந்ததால் அந்த சாலையில் மயில்கள் படத்துடன் கூடிய விழிப்புணர்வு அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன. வாகன ஓட்டிகளின் பார்வையில் படும் வகையில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பதாகைகளால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் வன விலங்குகள் நடமாட்டத்தை அறிந்து வாகனத்தின் வேகத்தை குறைக்கவும், கவனமாகவும் செல்லும் சூழல் ஏற்படும். இதனால் வாகன விபத்துகளும் தவிர்க்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்