சென்னை போலீசில் ஆஜராகும்படி பா.ஜ.க. நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன்

அவதூறு கருத்து பதிவிட்டதாக வழக்கில் சென்னை போலீசில் ஆஜராகும்படி பா.ஜ.க. நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

Update: 2023-07-14 19:05 GMT

தமிழக பா.ஜ.க. செயலாளர், எஸ்.ஜி.சூர்யா. இவர் கடந்த மாதம் 7-ந்தேதி தனது டுவிட்டரில், அவதூறு கருத்து பதிவிட்டதாக கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து, சென்னையில் எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் மதுரையில் ஒரு மாதத்துக்கு தங்கி இருந்து, போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

அதன்பேரில் அவர் மதுரையில் தங்கி இருந்தார். இந்த ஜாமீன் நிபந்தனையை மாற்றி அமைக்குமாறு மதுரை ஐகோர்ட்டில் எஸ்.ஜி.சூர்யா மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், எனது குடும்பத்தினர் சென்னையில் உள்ளனர். வயதான தாயார், தாத்தாவை நான்தான் கவனிக்கும் நிலை உள்ளது. எனவே சென்னை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடும் வகையில் ஜாமீன் நிபந்தனையை மாற்றம் செய்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், மனுதாரர் கோரிக்கையை ஏற்று அவர், சென்னை சைபர் கிரைம் போலீசில் தினமும் காலையில் ஆஜராகி கையெழுத்து போடும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்