டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 58,948 பேர் எழுதினர்
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 58,948 பேர் எழுதினர். தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) பரமேஸ்வரி ஆய்வு செய்தார்.
விழுப்புரம்,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-4 தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. இந்த தேர்வை விழுப்புரம் மாவட்டத்தில் எழுத 68 ஆயிரத்து 244 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் தேர்வு எழுதுவதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 207 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கினாலும், தேர்வர்கள் காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் தேர்வு மையங்களுக்குள் வரவேண்டும். வராதவர்கள் தேர்வு எழுத அனுமதிக்க மாட்டார்கள் என்று ஹால்டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையங்களுக்கு பெரும்பாலான தேர்வர்கள் காலை 7.30 மணிக்கே வந்து காத்திருந்தனர். அவர்கள் 8.30 மணிக்கு தேர்வு மையங்களுக்குள் சோதனைக்கு பிறகு அனுப்பி வைக்கப்பட்டனர். காலை 9 மணி வரை தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
சிறப்பு பஸ்கள் இயக்கம்
தொடர்ந்து காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணி வரை நடந்தது. அதன்பிறகே தேர்வர்கள் வெளியே அனுப்பப்பட்டனர். மாவட்டம் முழுவதும் நடந்த இந்த தேர்வை 58 ஆயிரத்து 948 பேர் எழுதினர். 9,296 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இத்தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் தடுக்க வினாத்தாள்களை கொண்டு செல்ல 53 நடமாடும் குழுக்களும், தேர்வை கண்காணிக்க துணை ஆட்சியர் நிலையிலான 27 பறக்கும் படை அலுவலர்களும் பணியில் ஈடுபட்டனர். தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு உரிய நேரத்தில் செல்வதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை இயக்கப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
இதில் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) பரமேஸ்வரி ஆய்வு செய்தார். அப்போது தேர்வு மைங்களில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என்று பார்வையிட்டார். தொடர்ந்து அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறாத வகையில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது வருவாய் கோட்டாச்சியர் ரவிசந்திரன், தாசில்தார் ஆனந்தகுமார் மற்றும் கல்விதுறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.