த.மா.க.வினர் பொங்கல் பானையுடன் கண்டன ஊர்வலம்
கோவில்பட்டியில் த.மா.க.வினர் பொங்கல் பானையுடன் கண்டன ஊர்வலம் நடத்தினர்.;
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் கிழக்கு மற்றும் நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையங்களின் எல்லையை மாற்றி அமைக்க வலியுறுத்தி நேற்று த.மா.க.வினர் பொங்கல் பானையுடன் கண்டன ஊர்வலம் நடத்தினர்.
த.மா.க.வினர் ஊர்வலம்
நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலைய எல்லையை மாற்றக்கோரி கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பிருந்து த.மா.க.வினர் நகரத் தலைவர் ராஜகோபால் தலைமையில் பொங்கல் பானையுடன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு கண்டன ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். ஊர்வலத்தில் கட்சி நிர்வாகிகள் பொங்கல் பானையுடன் அடுப்பு, பருத்தி மாறு கட்டுடன் பங்கேற்றனர். இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி முன்பு அவர்களை கிழக்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் தர்மராஜ், ரவீந்திரன், சிலுவை அந்தோணி மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி பொங்கல் பானை உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு செல்ல அனுமதித்தனர்.
போலீஸ் நிலைய எல்லை மாற்றம்
இதை தொடர்ந்து அவர்கள் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷை சந்தித்து கொடுத்த கோரிக்கை மனுவில், கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் காவல் நிலையம் தேசிய நெடுஞ்சாலை யில் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட கடலையூர், உருளைகுடி, கருங்காலிப்பட்டி, சிதம்பராபுரம் ஆகியவை எட்டயபுரத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தூரத்திற்குள் உள்ளன. அதேபோல் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெருமாள் பட்டி, லிங்கம்பட்டி, ஊத்துப்பட்டி, வரதம் பட்டி, விஸ்வநாத தாஸ் நகர் ஆகிய பகுதிகள் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்கைக்கு மிக அருகாமையில் உள்ளன. இந்தப் பகுதிகள் அனைத்தும் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில் அமைந் துள்ளன. இதை ஆய்வு செய்து போலீஸ் நிலையங்களின் எல்லையை மாற்றி அமைக்க வேண்டும்.
துணை சூப்பிரண்டு உறுதி
மேலும், கடலையூர், உருளைகுடி, கருங்காலிப்பட்டி, சிதம்பராபுரம், பெருமாள்பட்டி, லிங்கம்பட்டி, ஊத்துப்பட்டி, வரதம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 30 கிராம மக்கள் பயன்பெறும் விதமாக கடலையூரை தலைமையிடமாகக் கொண்டு போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஊர்வலம் நடந்தது.
மனுவை பெற்றுக் கொண்ட துணை போலீஸ் சூப்பிரண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.