திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் சாமி கோவிலில் தேரோட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் சாமி கோவில் திருவாலங்காட்டில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவர் வடாரண்யேஸ்வரர் தினமும் காலை, இரவு என இரு வேளைகளில் வெவ்வேறு வாகனத்தில் திருவீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் 7-ம் நாளான நேற்று, தேரோட்டம் நடந்தது. விழாவில் காலை 10 மணிக்கு உற்சவர் வடாரண்யேஸ்வரர், வண்டார் குழலியம்மனுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.
அங்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை, 10.30 மணிக்கு தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அப்போது, கோவில் துணை ஆணையர் விஜயா, கோவில் கண்காணிப்பாளர்கள் ஐயம்பிள்ளை, சித்ராதேவி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரின் வடம் பிடித்து அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் மாடவீதியில் இழுத்து சென்றனர். இந்த தேரோட்டத்தில் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணியில் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் மேற்பார்வையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.