திருத்தணி முருகன் கோவிலில் மூதாட்டியின் சங்கிலி பறிப்பு - 3 பெண்களுக்கு வலைவீச்சு
திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்ற மூதாட்டியின் சங்கிலியை பறித்து சென்ற 3 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
திருத்தணியில் உள்ள முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை நடைபெற்று கொண்டு இருக்கின்றது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியை சேர்ந்த செந்தில் (வயது 43) என்பவர் தனது குடும்பத்தினருடன் திருத்தணி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார்.
இவர்கள் குடும்பமாக முதலில் மூலவர் முருகப் பெருமானை தரிசனம் செய்துவிட்டு, உற்சவரை தரிசனம் செய்ய வரிசையில் நின்று கொண்டு இருந்தனர். அப்போது வரிசையில் நின்ற செந்திலின் தாயார் வசந்தியின் (70) கழுத்தில் இருந்து 5 பவுன் தங்க சங்கிலி மாயமாகி உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த செந்தில் கோவில் உள்ள புறகாவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து திருத்தணி குற்றப்பிரிவு போலீசார் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது வசந்தியின் பின்னால் நின்று கொண்டு இருந்த 3 பெண்கள் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய பெண்களை வலைவீசி தேடிவருகின்றனர்.