திருப்பூர்: வாக்குப்பதிவு எந்திரங்களின் பாதுகாப்பு அறையில் திடீர் மின்தடை
கனமழை காரணமாக கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த வாக்கு பதிவு எந்திரங்களின் அறையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.;
திருப்பூர்,
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு பாதுகாப்பு அறையிலும் பிரத்தியேகமாக கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த கேமராக்களுக்கு தனியே மின்சாரம் வழங்கப்பட்டு தடை ஏற்படாத வண்ணம் பாதுகாக்கப்பட்டு வருகிறது .
இந்நிலையில் திருப்பூரில் இன்று மாலை பெய்த கனமழையில் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரங்களின் அறையில் இரவு 8.15 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
குறிப்பாக பவானி சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மின்விளக்குகள் வெளிச்சம் இன்றி கேமரா காட்சிகள் டி.வி.யில் சரிவர தெரியாமல் போனது. இதனால் பாதுகாப்பு அறையின் வெளியே காவலில் இருந்த அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அங்கு தயார் நிலையில் இருந்த தொழில்நுட்பக் குழுவினர் உடனடியாக விரைந்து சென்று ஜெனரேட்டர் மூலமாக மின்சாரத்தை சீர்படுத்தினர். இதன் காரணமாக 10 நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் குறித்து அறிந்த கலெக்டர் கிறிஸ்துராஜ் நேரில் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டார். பின்னர் மழை காரணமாக மின்சாரம் தடைபட்டதாகவும், ஜெனரேட்டர் மூலமாக அதனை விரைந்து சரி செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.