திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்திற்கு ஐ.எஸ்.ஒ. தரசான்றிதழ் பெற நடவடிக்கை
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்துக்கு ஐ.எஸ.ஓ.தர சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.;
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்துக்கு ஐ.எஸ.ஓ.தர சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.
கருத்தரங்கு
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இந்திய தர நிர்ணயம் அமைவனம் சார்பில் அரசு அலுவலர்களுக்கான கருத்தரங்கு நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கினார். இதில் கலெக்டர் பேசியதாவது:-
நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துகின்ற அனைத்து விதமான பொருட்களுக்கும் தரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிற வீட்டிற்கும் இந்திய அரசு தரம் நிர்ணயம் செய்துள்ளது.
அதே போன்று கட்டுமான பணிகளில் பயன்படுத்துகின்ற சிமெண்டு, கம்பி மற்றும் குழாய் போன்ற பொருட்களுக்கு ஐ.எஸ்.ஐ.தரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நகைகள் வாங்கும்போது 916 கே.டி.எம். ஹால்மார்க் உள்ளதை உறுதிசெய்து வாங்க வேண்டும்.
வருவாய்த்துறையின் சார்பில் வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களை அரசு வழிகாட்டுதலின்படி பொதுமக்களுக்கு வழங்கப்படுவதில் 10-வது இடத்தில் நமது மாவட்டம் உள்ளது. மேலும் பாதுகாப்பு, அளவு மற்றும் தரம் ஆகியவை தர நிர்ணயத்திற்கு அடிப்படையாக அமைகிறது.
மேலும் நமது மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஐ.எஸ்.ஒ. தரசான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
16 வகையான பொருட்கள்
இக்கருத்தரங்கில் இந்திய தர நிர்ணயம் அமைவனம் கிளை தலைவர் பவானி கலந்து கொண்டு தர நிர்ணய அமைவனம் எவ்வாறு செயல்படுகிறது, பொருட்களில் தரத்துக்கான முத்திரை எவ்வாறு வழங்கப்படுகிறது, இந்த முத்திரை பெற்ற பொருட்களை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்.
இந்த முத்திரை பெறுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டன. மேலும் தங்கத்தின் தரச்சான்று, 16 வகையான கட்டுமான பொருட்களின் தரச்சான்று, நீர் பாசன உபகரணங்கள், பண்ணை எந்திரம், பயிர் பாதுகாப்பு உபகரணங்கள், சர்க்கரை ஆலை, பழங்கள், காய்கறிகள் கிடங்கு, தேநீர், காபி, மீன் பொருட்கள், இறைச்சி பொருட்கள், அரிசி வகைகள், வீட்டு உபயோக பொருட்கள், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் ஆகிய பொருட்களின் தரச்சான்றிதழ் குறித்து கருத்தரங்கில் கலெக்டர் அமர்குஷ்வாஹழ விளக்கி பேசினார்.
இதில் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயக்குமார், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ரவி, துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் செந்தில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருண்பாண்யடின், அரசுத்துறை உயர் அலுவலர்கள், இந்திய தர நிர்ணய அமைவனம் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.