திருப்பத்தூர் அரசு மருத்துவமனை 7,870 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்து தமிழகத்தில் முதலிடம் பிடித்தது

திருப்பத்தூர் அரசு மருத்துமனையில் கடந்த ஆண்டு 7 ஆயிரத்து 870 கர்ப்பிணிகளுக்கு பிரசவம்பார்த்து தமிழ் நாட்டிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளது.

Update: 2022-06-17 17:29 GMT

திருப்பத்தூர், ஜூன்.18-

திருப்பத்தூர் அரசு மருத்துமனையில் கடந்த ஆண்டு 7 ஆயிரத்து 870 கர்ப்பிணிகளுக்கு பிரசவம்பார்த்து தமிழ் நாட்டிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை முதன்மை மருத்துவர் குமரவேல் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் முதலிடம்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் திருப்பத்தூர், பர்கூர், ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடந்த ஆண்டு 72 ஆயிரம் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். 8,700 உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 7 ஆயிரத்து 870 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டு தமிழ் நாட்டிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளது.

இதில் 3 ஆயிரத்து 481 கர்ப்பிணிகளுக்கு ஆபரேஷன் மூலம் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவில் அரசு மற்றும் தனியார் மருத்துமனையில் பிறந்த குழந்தைகள், குறைப்பிரசவம் உள்ளிட்ட 720 குழந்தைகளுக்கு இங்கு அளிக்கப்பட்டு திருப்பத்தூர் மாவட்டத்திலேயே முதலிடம் பெற்றுள்ளது.

ரூ.50 கோடியில் புதிய கட்டிடம்

மேலும் 18.5 கோடியில் கட்டப்பட்ட தாய் சேய் நல கட்டிடம் கட்டப்பட்டு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு ரூ.50 கோடியில் அனைத்து சிகிச்சைகளும் அளிக்க புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு உத்தரவிடப்பட்டு விரைவில் கட்டிடம் கட்டப்பட உள்ளது. மாதம்தோறும் 60 பெரிய மற்றும் சிறிய ஆபரேஷன்கள் செய்யப்படுகிறது.

கொரோனா தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி பொதுமக்களுக்கு இலவசமாக போடப்படுகிறது. அனைத்து விதமான உயிர் காக்கும் மருந்துகள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட இணை இயக்குனர் மாரிமுத்து மற்றும் அரசு டாக்டர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்