திருப்பரங்குன்றம் பகுதியில் முழு மானியத்தில் தக்காளி, கத்தரி நாற்றுக்களை வழங்க வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை

திருப்பரங்குன்றம் பகுதியில் முழு மானியத்தில் தக்காளி, கத்தரி நாற்றுக்களை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2023-09-25 01:18 GMT

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் பகுதியில் முழு மானியத்தில் தக்காளி, கத்தரி நாற்றுக்களை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நடப்பு ஆண்டு வழங்கவில்லை

திருப்பரங்குன்றத்தை அடுத்த வேடர்புளியங்குளம், சாக்கிலிப்பட்டி, .சின்னசாக்கிலிப்பட்டி, தென்பழஞ்சி, வெள்ளப்பாறைப்பட்டி, வடபழஞ்சி, மனப்பட்டி, கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி உள்ளிட்ட கிராமங்களில் பல ஏக்கர் பரப்பளவில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கத்தரி, தக்காளி, மிளகாய், வெண்டைக்காய், வெங்காயம் ஆகிய காய்கறிகளை பயிரிட்டு அதை சாகுபடி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதற்காக தோட்டக்கலை துறையின் கீழ் ஆண்டுதோறும் ஆடி, ஆவணி மாதங்களில் முழு மானியத்தில் ஒரு ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை கத்தரி, தக்காளி, வெங்காயம் மற்றும் மிளகாய் நாற்றுக்களை வழங்கி வந்தனர்.ஆனால் நடப்பு ஆண்டிற்கு இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் தோட்டங்களில் விவசாயம் செய்ய முடியாமல் தங்களது தோட்டங்களை தரிசாக போட்டுள்ளனர்.

முழு மானியத்தில் வழங்க வேண்டும்

முழு மானியத்தில் நாற்றுக்கள் வழங்கப்படாததால் விளைச்சல் இல்லாமல் மீண்டும் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமோ? விலை உயர்வால் பொது மக்கள் பாதிக்கப்படுவார்களோ? என்ற அச்சம் நிலவுகிறது.

மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகி உள்ளது. இதுதொடர்பாக விவசாயி தென்பழஞ்சி சிவராமன், விவசாய சங்க பொறுப்பாளர் திருநகர் லட்சுமணன் ஆகியோர் கூறும்போது, கடந்தகாலத்தை போல முழு மானியத்தில் கத்தரி, தக்காளி நாற்றுக்களை தோட்டக்கலை துறையின் மூலம் வழங்கிட அரசு முன்வரவேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்