அபயபிரதான ரெங்கநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

சித்திரை திருவிழாவையொட்டி அபயபிரதான ரெங்கநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தேரோட்டம் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

Update: 2023-05-02 19:37 GMT

சித்திரை திருவிழா

கரூர் மேட்டுத்தெருவில் பிரசித்தி பெற்ற அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து, தினமும் மாலை அன்னப்பறவை வாகனம், சிம்ம வாகனம், அனுமன் வாகனம், வெள்ளி கருட வாகனம், ஐந்து தலை நாக வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது.

இந்தநிலையில் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி உடனாகிய ரெங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டது.

திருக்கல்யாண உற்சவம்

தொடர்ந்து கோவில் மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் மணக்கோலத்தில் ரெங்கநாதர் எழுந்தருளினார். தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் கரூர், தாந்தோன்றிமலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. 7-ந்தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்