திருச்செந்தூர், கோவில்பட்டியில்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்குகடன் உதவி வழங்கும் முகாம்

திருச்செந்தூர், கோவில்பட்டியில்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு கடன் உதவி வழங்கும் முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-02-07 18:45 GMT

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினருக்கு திருச்செந்தூர், கோவில்பட்டியில் கடன் உதவி வழங்கும் முகாம் நடக்கிறது.

இது குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கடன் உதவி

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினருக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபர் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறு வணிகக் கடன், கைவினைக் கலைஞர்களுக்கான கடன் ஆகியவை ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 4 சதவீதம் முதல் 8 சதவீதம் வரையிலான குறைந்த வட்டி விகிதத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது.

நாளை

இந்த கடன் உதவி வழங்கும் முகாம் ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தோருக்கு திருச்செந்தூர் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 முதல் மாலை 5 மணிவரை நடக்கிறது.

அதேபோன்று கோவில்பட்டி, விளாத்திகுளம், கடம்பூர், கயத்தாறு, வானரமுட்டி, கழுகுமலை பகுதியை சேர்ந்தோருக்கான முகாம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கோவில்பட்டி பிரதான கிளையில் வருகிற 14-ந் தேதி காலை 10 முதல் மாலை 5 மணிவரை நடக்கிறது.

சாதி, வருமானம், இருப்பிடச் சான்றுகள், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள், தொழில் திட்ட அறிக்கை (ரூ.1 லட்சத்துக்கு மேற்பட்டிருப்பின்) ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்று பயனடையலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்