திருச்செந்தூர்: படகு கவிழ்ந்து கடலுக்குள் விழுந்த 2 பேர் மாயம் - தேடும் பணியில் கடலோர காவல் படை தீவிரம்
திருச்செந்தூரில் மீன்பிடிக்க சென்றபோது, படகு கவிழந்து கடலுக்குள் தவறி விழுந்த 2 மீனவர்களை தேடும்பணி தீவிரமாக நடந்து வருகிறது.;
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மீனவர் கிராமமான அமலிநகர் உள்ளது. இங்குள்ள மீனவர்கள் தினமும் நள்ளிரவு பைபர் படகில் மீன்பிடித் தொழிலுக்கு சென்று விட்டு அன்று மாலையில் கரை திரும்புவது வழக்கமாக இருந்து வருகிறது.
அதேபோல் மீனவர்கள் நேற்று நள்ளிரவு மீன்பிடித் தொழிலுக்கு சென்றுள்ளனர். ஆனால் நேற்று மீன்பிடி தொழிலுக்கு சென்ற படகுகள் கரைக்கு வந்து நிலையில், அதே பகுதியை சேர்ந்த அஸ்வின் (32), பிரசாத் (40), பால்ராஜ் (22), நித்தியானந்தம் (42) ஆகியோர் சென்ற படகு மட்டும் பலத்த காற்றின் காரணமாக கடலில் கவிழ்ந்தது.
இதில் பால்ராஜ், நித்தியானந்தம் ஆகியோர் கடலில் தத்தளித்ததை பார்த்த மற்ற படகில் சென்ற மீனவர்கள் காப்பாற்றினர். மேலும் அஸ்வின், பிரசாத் ஆகியோரை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. கடலில் காற்றின் வேகம் அதிக அளவு காணப்பட்டதால் மீட்கப்பட்ட இரண்டு பேரை மட்டும் கரைக்கு அழைத்து வந்தனர்.
இந்த தகவலறிந்த அமலிநகர் மீனவர்கள் 7 படகில் சுமார் 30 க்கும் மேற்பட்டோர் கடலுக்கு சென்று தேடும் பணியில் நேற்று மாலையில் இருந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். தற்போது கடலில் மாயமான 2 மீனவர்களை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.