பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய 5 ஆண்டு கால அவகாசம்

பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய 5 ஆண்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-30 13:38 GMT

பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய 5 ஆண்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குழந்தையின் பிறப்பு சான்றிதழ்

பிறப்பு சான்றிதழ் குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை பெற, வயது குறித்து ஆதாரம், ஓட்டுனர் உரிமம் பெற, பாஸ்போர்ட்டு மற்றும் விசா பெற இன்றியமையாத ஆவணமாகும். ஒரு குழந்தையின் பிறப்பை பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த குழந்தையின் பிறப்பை பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 12 மாதத்துக்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்மந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணம் இன்றி பெயர் பதிவு செய்து கொள்ளலாம். 12 மாதங்களுக்கு பின்னர் குழந்தையின் பெயரை 15 ஆண்டுகளுக்குள் உரிய கால தாமத கட்டணம் செலுத்தி பதிவு செய்யலாம்.

2000-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதிக்கு முன் பிறந்த குழந்தைகளுக்கு 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை பெயரை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டது. இந்த காலஅளவு முடிவுற்ற பின்னரும் 5 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை குழந்தையின் பெயர் பதிவு செய்ய அரசு ஆணை பிறப்பித்தது.

நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி முடிவுற்ற நிலையில் பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்ய பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகினர். வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு அந்த நாட்டின் குடியுரிமை பெறவும், மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற சிக்கல் ஏற்பட்டது.

5 ஆண்டு கால அவகாசம்

இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதிக்கு முன்பு பெயரின்றி பிறப்பு பதிவு செய்யப்பட்ட பிறப்புகள், வகுத்துரைக்கப்பட்ட 15 ஆண்டு கால அவகாசம் முடிவுற்ற அனைத்து பிறப்பு பதிவுகளும், மேலும் 5 ஆண்டு கால அவகாசம் நீட்டித்து வருகிற 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை பெயர் பதிவு செய்திட தற்போது அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

ஒருமுறை குழந்தையின் பெயரை பதிவு செய்தபின்னர் எந்த காரணம் கொண்டும் மாற்ற இயலாது. எனவே குழந்தையின் பெயரை இறுதியாக முடிவு செய்த பின்னர் சம்மந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரை அணுகி உறுதிமொழி படிவம் அளித்து பதிவு செய்யலாம்.

இதுபோன்ற காலஅவகாசம் வருங்காலங்களில் வழங்க இயலாது என்று அரசு உத்தரவில் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்