திற்பரப்பு அருவியில் குளிக்க அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்

விடுமுறை நாளான நேற்று திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.;

Update: 2022-07-10 16:47 GMT

திருவட்டார், 

விடுமுறை நாளான நேற்று திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

திற்பரப்பு

குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். விடுமுறை நாளான நேற்று திற்பரப்பு அருவியில் காலை முதலே சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினர். அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்து, சிறுவர் பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர்.

திற்பரப்பு பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பெய்ததால் 'குளு குளு' சீசன் நிலவியது. மதியத்திற்கு மேல் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்தது. அருவியில் குளித்த சுற்றுலா பயணிகள் திற்பரப்பு தடுப்பணை பகுதியில் சென்று படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏராளமானோர் வாகனங்களில் வந்ததால் திற்பரப்பு பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

மாத்தூர் தொட்டிப்பாலம்

திருவட்டார் அருகே உள்ள மாத்தூர் தொட்டிப்பாலத்திலும் காலை முதல் சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் தொட்டிப்பாலத்தில் நடந்து சென்றும், பாலத்தில் இருந்து கீழே இறங்கி பிரமாண்டமான தூண்களை பார்த்து ரசித்தும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தொட்டிப்பாலத்தின் கீழ் பகுதியில் ஓடும் பரளியாற்றில் குளித்து மகிழ்ந்தனர்.

இதுபோல், கன்னியாகுமரி, பத்மநாபபுரம் உள்பட குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

Tags:    

மேலும் செய்திகள்