புலி தாக்கி 2 பசு மாடுகள் பலி
ஊட்டி அருகே புலி தாக்கி 2 பசு மாடுகள் இறந்தன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
ஊட்டி
ஊட்டி அருகே புலி தாக்கி 2 பசு மாடுகள் இறந்தன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
2 பசு மாடுகள் பலி
நீலகிரி மாவட்டம் 65 சதவீதத்திற்கும் அதிகமாக வனப்பகுதிகளை கொண்டு உள்ளது. இதற்கிடையே தீவன தட்டுப்பாடு, வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு, வழித்தடங்கள் அழிப்பு உள்பட பல்வேறு காரணங்களால் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து காட்டு யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் ஊருக்குள் புகுந்து வருகின்றன.
குறிப்பாக குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் பகுதிகளில் கரடி, சிறுத்தை நடமாட்டமும், கூடலூர் பகுதியில் காட்டு யானை நடமாட்டமும் உள்ளது. கடந்த சில நாட்களாக ஊட்டி எச்.பி.எப். பகுதியில் புலி நடமாட்டம் காணப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் எச்.பி.எப். இந்து நகர் பகுதியை சேர்ந்த பரமேஷ், சதீஷ் ஆகியோரின் 2 பசு மாடுகள் மேச்சலுக்கு சென்று விட்டு திரும்பி வரவில்லை. இதனால் அவர்கள் அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்று பார்த்தனர். அப்போது புலி தாக்கி 2 பசு மாடுகள் இறந்து கிடந்தது தெரியவந்தது.
வனத்துறையினர் ஆய்வு
இந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எச்.பி.எப். பகுதியில் தொழிற்சாலை மூடப்பட்டு விட்டதால் அந்தப் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து விட்டது. இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. புலியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வனவர் சசிகுமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில், புலி நடமாட்டத்தை கண்காணிக்க குறிப்பிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். பின்னர் புலி நடமாட்டத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.